தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு- Caste Survey நடத்த வேண்டும்- விஜய்

Published On:

| By Minnambalam Desk

Actor Vijay

மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினாலும் தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வலியுறுத்தி உள்ளார். TN Government Must Also Conduct Caste Survey: Actor Vijay

இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்த கோரிக்கையானது இந்திய ஒன்றியம் முழுவதும் வலுவடைந்துள்ளது. இதனால் மத்திய பாஜக அரசு இறங்கி வந்து நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

எனவே, தமிழக அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு. மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.க,வின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.

அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share