பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என மாம்பழம் பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். aiadmk announce protest fair price for mangoes
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மாம்பழம் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் ஜூன் 20-ஆம் தேதி உண்ணாவிர போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து, அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது ‘மா’ மற்றும் ‘தென்னை’ ஆகும்.

சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் ‘மா’ சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட ‘மா’ விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.
மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘மா’ விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். aiadmk announce protest fair price for mangoes
