தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்காததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு (Tamil Nadu Government) வழக்கு தொடர்ந்துள்ளது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராத குடியரசுத் தலைவர்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்காததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-ல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இம்மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றியது. இம்மசோதாவை 2022-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் ரவி அனுப்பினார்.
ஆனால் இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு அரசு நவம்பர் 15-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நீட் விலக்கு கோரும் மசோதா
- 2017: தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது.
- 2019: அதிமுக அரசு நீட் விலக்கு கோரி மசோதாவை நிறைவேற்றியும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்பின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2021 மே: “நீட் தேர்வு ரத்து” தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என அறிவித்து திமுக ஆட்சிக்கு வந்தது.
- 2021 ஜூலை 14: நீட் தேர்வால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, நீட் விலக்குக்கு பரிந்துரைத்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
- 2021 செப்டம்பர் 13: ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், நீட் விலக்கு கோரும் “தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சட்டம், 2021” என்ற மசோதாவை தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
- 2022 பிப்ரவரி 1: ஆளுநர் ஆர்.என். ரவி, நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார். நீட் விலக்கு, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அவர் கருத்து தெரிவித்தார்.
- 2022 பிப்ரவரி 8: ஆளுநரின் முடிவை நிராகரிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவை அதே நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
- 2022 ஏப்ரல் 17/18: தமிழக சட்டமன்றத்தால் இருமுறை நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்தார்.
- 2025 ஏப்ரல் 4: நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- 2025 ஜூன் 28: மத்திய அரசின் நிராகரிப்புக்கு எதிராக, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- 2025 நவம்பர் 15: குடியரசுத் தலைவரால் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
