கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்கல்வி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பின்தங்கிய பகுதி மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கவும் இந்த பகுதி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து சட்டமசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். இணை வேந்தராக உயர்க்கல்வித் துறை அமைச்சர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார்.
இந்தசூழலில் ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று (அக்டோபர் 4) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் மிஷா ரோத்தஹி தாக்கல் செய்த அந்த மனுவில், ‘கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை என்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்திருந்த வழக்கில், இம்மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.