இலங்கை வாழ் தமிழ்க் கவிஞர் அஸ்மின். ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்து சில படங்களுக்குப் பாடல் எழுதிய அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை . எனினும் மனம் தளரவில்லை.
கடலில் தொலைத்த மோதிரத்தைக் கரையில் தேடாதே ‘ என்ற பழமொழிக்கு ஏற்ப, இலங்கை சென்று இலங்கையில் திரைப்படம் எடுக்க நினைப்போரை ஒன்று சேர்த்தார்.
IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் ‘மில்லர்‘ திரைப்படம் அப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. படத்துவக்க விழா யாழ்ப்பணத்தில் உள்ள வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வைரமுத்து பற்றிப் பேசிய அஸ்மின், “எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.
கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது” என்றார் .
கவிஞரைக் கவிஞரே காமுறுவார்.
- ராஜ திருமகன்
