தமிழ் பிச்சை எடுக்க உதவாது… திருடவும் உதவாது : ராஜ்யசபாவில் காட்டமாக பேசிய கமல்

Published On:

| By Kavi

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 4) தனது உரையை  முதல்முறையாக மாநிலங்களவையில் ஆற்றினார். 

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசிய கமல்ஹாசன்,  ”எனது தமிழ் ஆசிரியர்களால் நான் எனது மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை.

ADVERTISEMENT

‘துரை’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் ‘அரசன்’ என்று பொருள். அவர் ஒரு அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாம் அவரை நம் மனதில் அரசராக முடிசூட்டினோம்.

நமது மொழி, கலாச்சாரம் அல்லது நமது உரிமைகள் மீது தொடுக்கப்படும், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார். தமிழ் மீது கொண்ட பற்று என்னை அவரை நோக்கி அழைத்துச் சென்றது, சொல்லப்போனால் ஈர்த்தது.

ADVERTISEMENT

அவர் பேசிய அதே அவையில் நானும் இப்போது பேசுகிறேன். மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சியால் நான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குள் மையம் கொண்ட புயல், என் உணர்ச்சிப் பெருக்கான வார்த்தைகளாக நேரடியாக வெளிப்பட்டால் அது உங்களைப் புண்படுத்தக்கூடும் என்பதால், நான் நிதானமான மொழியில் இதை எழுதி வைத்துள்ளேன்.

இன்று பிப்ரவரி 4-ஆம் தேதி, அண்ணாவின் மகன்களில் ஒருவனாகவும், எம்.கே. காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

ADVERTISEMENT

இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  உயர்நிலைப் பள்ளியில் இடைநின்றவன் என்ற நிலையில், பொருளாதாரத்தைப் பற்றி பேச எனக்குத் தகுதி இல்லை என்று நீங்கள் கூறலாம். அது அப்படியே இருக்கட்டும்.

இருப்பினும், நீங்கள் அனைவரும் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து கற்கும் ஒரு மாணவனாக, ஒரு தமிழனாக எனக்கு ஒரு கருத்து உள்ளது.

“ஸ்பெல்” என்பது ஒரு சொல்லாகவும் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன.

ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை.

Ec (ஈசி) என்றால் இங்கிலீஷ் கோச்சஸ் (English coaches) என்று அர்த்தமல்ல.

பீகார் ஏற்கனவே பல வாழும் பிணங்களின் தேசமாகிவிட்டது. (வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாழும் பிணங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்)

இந்த நோய் நாடு முழுவதும் பரவ நாங்கள் விரும்பவில்லை. நான் இந்த அவையில் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நோய் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. தமிழகத்திலும் விரைவில் காகித அளவில் சுமார் ஒரு கோடி வாழும் பிணங்கள் உருவாக கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

வாழும் பிணங்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கு நான் பேசுவது அவையில் உள்ள சிலருக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நான் கடவுளை நோக்கி கை கூட்ட போவது இலலை. எனது பகுத்தறிவு மூளை கடவுள் என்ற பிம்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அப்புறப்படுத்தி விட்டது” என்று கூறினார்.

தொடர்ந்து என் மாநில மக்களுக்காக நான் தமிழில் பேசுகிறேன் என்று கூறிய அவர், ‘பிச்சைப்பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது. நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாக கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதன் பிறகு தான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை தமிழரை பார்த்து பிச்சை எடுக்க கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.

இது ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே.

தமிழ் பிச்சை எடுக்க உதவாது… திருடவும் உதவாது.

தமிழின் பிச்சை எடுக்க மாட்டான்… அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.

தங்கச்சி… ஓட்டையும் நாட்டையும் கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன்.

கருணையுடன் நீங்களே ஏற்பீர்கள். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்றிது.

 ‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட” என்று உரையாற்றினார்.  

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று 27 நவம்வர் 1943 அன்று வெளியான விடுதலை  பத்திரிகையில்  ஒருவர் (பெரியார்) கூறியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

இந்தசூழலில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share