’சாதீய’ அரசியலைச் சுமக்கும் கிராமங்கள்
உதயசங்கரன் பாடகலிங்கம்
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் படங்களைத் தந்திருக்கும் இயக்குனர் ராஜு முருகன், அப்படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அவற்றின் வித்தியாசமான உள்ளடக்கத்திற்காகக் கவனிப்பைப் பெற்றவர்.
ஒரு படத்தை அவர் வழங்குகிறார் என்பதுவே ‘பராரி’யின் முதல் அடையாளமாக நோக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அப்படத்தின் டீசர், ட்ரெய்லரும் ரசிகர்களை விழிகள் விரியச் செய்தது. சாதீய அரசியலைச் சுமக்கும் கிராமமொன்றைப் பின்னணியாகக் கொண்டு, மொழி அரசியலைப் பேசுகிறதா இப்படம் என்ற கேள்வியையும் எழச் செய்தது.
‘பராரி’ தரும் காட்சியனுபவம் இக்கேள்விக்கு என்ன பதிலைத் தருகிறது?
வாழ்வியல் சிக்கல்கள்!
திருவண்ணாமலை வட்டாரத்திலுள்ள ராஜாபாளையம் எனும் கிராமமொன்றில் இக்கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது.
ஊருக்கு வெளியே வாழும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கோயிலுக்காக நேர்ந்துவிட்ட பன்றி, ஊருக்குள் நுழைந்து விடுகிறது. அதனைத் துரத்திச் சென்று பிடிக்கின்றனர் சிலர். அவர்களில் ஒருவர் மாறன் (ஹரிசங்கர்). ஊருக்குள் வாழும் தேவகி (சங்கீதா கல்யாண்) அவரைப் பார்த்ததும் மகிழ்கிறார்.
அக்காட்சிகளில் இருந்து திரைக்கதை தன் பயணத்தைத் தொடங்குகிறது.
சிறு வயதில் ஊர் திருவிழாவில் தெருக்கூத்து பார்த்த காரணத்திற்காக, தேவகியின் உறவினர்களால் தாக்கப்படுகிறார் மாறன். அதன்பிறகு, அவர் அப்பெண்ணைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை. வளர்ந்தபிறகும் இது தொடர்கிறது.
ஆனால், தேவகியோ மாறனைக் காதலிக்கத் தொடங்குகிறார். அதனை அவரிடம் நேரில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அதனைச் சொல்ல இயலாத வகையில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் முற்றும் வகையில் கோயில் திருவிழா முதல் ஊரின் அருகேயிருக்கும் மொட்டைப்பாறையைப் பயன்படுத்துவது வரை பல பிரச்சனைகள் நிகழ்கின்றன.
இந்த நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மேஸ்திரி கர்நாடகாவில் இருக்கும் பழச்சாறு ஆலைக்குச் சிலரை அழைத்துச் செல்கிறார். அவரிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தேவகியும் அவரது தந்தையும் அங்கு செல்கின்றனர். தந்தை வாங்கிய கடனுக்காக, நான்கு மாதங்கள் வரையிலான அந்த கூலி வேலைக்கு மாறனும் சொல்கிறார்.
அவ்வாறு செல்லும் கிராமத்தினரோடு ஜெயக்குமாரும் (பிரேம்நாத்) செல்கிறார். அவருக்கும் மாறனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அது மட்டுமல்லாமல், தேவகிக்கு அவரைக் கட்டித் தருவதென்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கின்றனர்.
இன்னொரு மாநிலத்தில் இருக்கும் ஒரு ஊரில் இரு பிரிவினரும் ஒரே குடியிருப்பைப் பயன்படுத்த வேண்டிய சூழல், அது போதாதென்று தேவகிக்கு மாறன் மீதிருக்கும் காதலைக் கண்டதும் ஜெயக்குமாருக்கு ஆத்திரம் பீறிடுகிறது.
இந்த நிலையில், ‘கர்நாடகம் கன்னடர்களுக்கே’ என்று முழங்கும் ஒரு கட்சியின் ஆதரவாளராகத் திகழும் ஜெகன் (புகழ் மகேந்திரன்) அந்த ஆலைக்கு வேலை செய்ய வருகிறார். தமிழகத்தில் இருந்து வந்த தொழிலாளர்களால் அங்கிருப்பவர்களுக்கு வேலை இல்லை என்று மனம் புழுங்குகிறார். அதற்காக, வேண்டுமென்றே அங்கு வேலை செய்பவர்களோடு வம்பிழுக்கிறார்.
ஒருநாள் தேவகியை ஜெகன் அவமானப்படுத்த, அதனைப் பொறுக்க முடியாமல் மாறன் அவரைத் துவைத்தெடுக்கிறார். இது ஜெயக்குமாரை எரிச்சலின் உச்சத்தில் நிறுத்துகிறது.
அதைத் தொடர்ந்து, ‘இன்னும் ஒரே வாரத்தில் எனக்கும் தேவகிக்கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும்’ என்று அப்பெண்ணின் தந்தையிடம் சொல்கிறார் ஜெயக்குமார்.
அதன்பிறகு என்னவானது? தேவகி தன் மனதிலுள்ள காதலை மாறனிடம் தெரிவித்தாரா? அவமானப்பட்ட ஜெகன், தனது ஆத்திரத்தைத் தீர்க்க என்ன செய்தார்?
காவிரி நீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு பின்னணியில், இது போன்ற கேள்விகளுக்கான பதிலைக் காட்சிகளாகத் தந்திருக்கிறது ‘பராரி’.
தொடக்கத்தில் நேர்த்தியாக ஒருகோட்டில் பயணிக்கும் திரைக்கதை, மீண்டும் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையேயான மோதல்களைக் காட்டி அதன் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
இடைவேளைக்குப் பிறகு இன்னொரு மாநிலத்திற்குத் தாவி வேறொரு பிரச்சனையைக் கையிலெடுக்கிறது. இரண்டையும் ஒன்றுக்கொன்று குறுக்காகப் பிணைய முயன்ற வகையில், ரசிகர்களான நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார் எழில் பெரியவேடி. அதுவே இப்படத்தின் பலவீனம்.
அதனைக் கடக்கத் தயார் என்றால், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தரும்.
திரையோடு பிணைக்கும் இசை!
நாயகனாக ஹரிசங்கர், நாயகியாக சங்கீதா கல்யாண் இதில் நடித்திருக்கின்றனர். புதுமுகங்கள் என்று தெரியாவண்ணம் இருவரது நடிப்பும் அமைந்திருப்பது சிறப்பு. அதேநேரத்தில், கிளைமேக்ஸ் காட்சியில் அவர்களது இருப்பு போதுமான அளவுக்கு இல்லை.
அக்காட்சி எழுதப்பட்ட விதம் போதுமான நேர்த்தியோடு அமையவில்லை என்பது அதற்கான காரணமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் செங்கல் சூளை உரிமையாளராக குரு ராஜேந்திரன், மொழி அமைப்பின் தலைவராக சாம்ராட் சுரேஷ், அதன் தொண்டராக புகழ் மகேந்திரன், ஜெயக்குமார் ஆக பிரேம்நாத் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.
அவர்கள் தவிர்த்து நாயகனின் தந்தையாக நடித்தவர், ஜெயக்குமாரின் தாயாக வருபவர் உட்படப் பலர் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, சாம் ஆர்டிஎக்ஸின் படத்தொகுப்பு, கலை இயக்குனர் சுகுமாரின் கைவண்ணம் என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து இயக்குனர் எழில் பெரியவேடி திரையில் காட்ட விரும்பிய உலகை உயிரூட்டியிருக்கின்றன.
மிக முக்கியமாக, ஷான் ரோல்டனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் ஆதாரமாகத் திகழ்கின்றன.
பல காட்சிகளில் அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் அழுத்தமாக நமக்குள் கடத்த உதவியிருக்கிறது அவரது பின்னணி இசை. பாடல் வரிகளும் அவற்றுக்கான இசையும் கதையோடு கலந்து, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களோடு பிணைந்து அமைந்திருக்கின்றன.
எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் எழில் பெரியவேடி, திரைக்கதையில் பெரிதாகத் திருப்பங்களைப் புகுத்தாமல் ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலைத் திரையில் காட்ட முயன்றிருக்கிறார். அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகள் இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும்போது எப்படி மறைந்து போகிறது என்பதை உணர்த்தியிருக்கிறார்.
ஆனால், கிராமத்தில் நிலவும் சாதீயத்தை, அதற்கான தீர்வு வேண்டுமென்ற எண்ணத்தைத் திரையில் உயிர்ப்போடு காட்டியவர் மொழி ரீதியிலான பிரச்சனையைக் காட்டும் காட்சிகளில் மட்டும் சினிமாத்தனத்தை கலந்திருக்கிறார். அதனைச் சரிப்படுத்தியிருந்தால், இப்படம் இன்னொரு உயரத்தைத் தொட்டிருக்கும்.
‘பராரி’ என்றால் சொந்த கிராமத்திலுள்ள வீடு, நிலத்தை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்றவன் என்பது பொருள். உலகமயமாக்கலால் கிராமங்களை விட்டு ஏதேதோ நகரங்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர் ‘பராரிகள்’ தான். அப்போது, அவர்கள் மீது சுமத்தப்படும் அடையாளத்தைப் பேச விரும்பிய இப்படம், திரைக்கதையின் போக்கைத் தீர்மானிப்பதில் திசை தவறித் தடுமாறியிருக்கிறது. போலவே, கிளைமேக்ஸ் காட்சியில் வரும் வன்முறையும் ‘அதீதமாக’ தென்படுகிறது.
அவற்றைப் புறந்தள்ளிவிட்டால், காட்சிரீதியில் நல்லதொரு அனுபவத்தைத் தரும் இந்த ‘பராரி’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்..
“விக்கிரவாண்டியிலதான் போட்டியிடனும்” : விஜய்யிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்!