தவெக தலைவர் விஜய்யை இன்று (நவம்பர் 23) சந்தித்த விக்கிரவாண்டி விவசாயிகள், அவரிடம் எங்கள் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு நடத்துவதற்கு இடம் கொடுத்த விவசாய குடும்பங்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சந்தித்து நன்றி சொல்வதற்கு பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்தார்.
கார் பார்க்கிங்கிற்கு இடம் கொடுத்த 5 குடும்பங்கள், மாநாடு திடலுக்கு இடம் கொடுத்த 26 குடும்பங்கள் என 31 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேருந்து, ஒரு வேனில் அழைத்து வரப்பட்டனர்.
அனைவருக்கும் நன்றி கூறி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனி தனியாக நன்றி கூறி அவர்களுடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன் பிறகு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உணவு பரிமாறினார்.
நிகழ்ச்சி முடிந்து புறப்படுவதற்கு முன், மங்களகரமான நிகழ்ச்சிக்கு தாம்பூலம் கொடுப்பது போல் வேட்டி, சேலை கொடுத்தார் விஜய்.
அப்போது அவர்களிடம், “மாநாடு முடிந்த பின்னர் உங்கள் நிலங்களை சரி செய்து கொடுக்க சொல்லியிருந்தேன். சரி செய்து கொடுத்தார்களா… வேறு எதாவது குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நான் சரி செய்து தருகிறேன்” என்றார் விஜய்.
இதற்கு விவசாயிகள், “நிலங்களை உடனடியாக சரி செய்து கொடுத்துவிட்டனர். நீங்கள் எங்கள் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்” என்று உரிமையுடன் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பின் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மாநாட்டுக்காக நான்கரை ஏக்கர் நிலம் கொடுத்தோம். 45 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு பணம் கொடுத்தாங்க. அங்கு தவெக கொடிக்கம்பம் வைத்திருக்கிறார்கள். அதில் லைட்னிங் அரசஸ்டர் என்ற கருவியை வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு 500 மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இடி மின்னல் தாக்கும் அபாயம் இருக்காது. இதை எங்களுக்காக செய்து கொடுத்தது சந்தோஷம். மற்ற கட்சிகளுக்கும் நாங்கள் நிலம் கொடுத்திருக்கிறோம்.
ஆனால் இவர்கள் எங்களுக்கு செய்ததை போல வேறு யாரும் செய்ததில்லை. எப்படி கொடுத்தோமோ அதைபோலவே எங்களுக்கு நிலத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள்.
நீங்கள் இல்லை என்றால் இந்த மாநாடே நடத்திருக்க முடியாது என்று சொல்லி எங்களை நெகிழ வைத்துவிட்டார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
மகாராஷ்டிராவில் மகா வெற்றி பெற்ற மோடி- மிக முக்கியமான 5 ஃபேக்டர்கள் இதோ!