தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என தலேமா நிறுவன தொழிலாளர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் புது ரோடு அருகில் தலேமா எலக்ட்ரானிக் நிறுவனம் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
தொடர்ந்து லாபம் ஈட்டி வந்த நிலையில் திடீரென கடந்த சில நாள்களுக்கு முன் நிறுவனம் தானாக முன் கதவடைப்பு செய்தது. மேலும் பணியாளர்கள் அனைவரும் தானாகவே பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தலேமா நிறுவனத்தை மூடுவதற்காகவே சிறப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 300 பெண்கள் உள்ளிட்ட 600 பேரை பணியிலிருந்து விலகும்படி அதன் மேலாளர் வலியுறுத்தி வருகிறார். அதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நிறுவனத்தின் உயரதிகாரிகளை அழைத்துப் பேச வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் கண்ணில் கருப்பு துணி கட்டியும், பிச்சை எடுத்தும், டவர் மீது ஏறி நின்றும், ஒப்பாரி வைத்தும், நாமம் போட்டும் தொடர் போராட்டங்களைத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பிக் கொடுக்க இருப்பதாகவும், குடும்பத்தினரோடு தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.