சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா இன்று ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.
யார் இந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி?
சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்ப்பூரில் பிறந்தார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் ஜபல்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
மேலும், ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் சுமார் 24 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டு அவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2018 மார்ச் 17 அன்று நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் 23 ஏப்ரல் 2025 கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
