தேனி மாவட்டத்தில் 2011-ல் நிகழ்ந்த சுருளி இரட்டைக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர் குற்றவாளியே இல்லை எனத் தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Supreme Court Surili Death Case
“தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள் எழில் முதல்வன் – கஸ்தூரி. அப்பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இருவரும் 2011-ம் ஆண்டு மே 14-ந் தேதி சுருளி அருவிக்கு சென்றுள்ளனர். இந்த ஜோடியுடன் அவர்களது நண்பர்களான ராஜ்குமார்- பாக்கியலட்சுமி என்ற காதல் ஜோடியும் சென்றுள்ளது.
இந்த 4 பேரும் சுருளி அருவியில் குளித்துவிட்டு அங்கிருந்து தனித் தனி ஜோடிகளாக அருகே உள்ள கைலாசநாதர் குகை கோவிலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்ற நபர், ராஜ்குமார்- பாக்கியலட்சுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகைகளை கழற்றச் சொல்லி இருக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி நகைகளை கழற்றித் தந்துள்ளார். ஆனால் அவை கவரிங் என்பதால் சற்று தொலைவில் இருந்த கஸ்தூரி – எழில் முதல்வன் ஜோடியை நோக்கி திவாகர் சென்றுள்ளார்.
அங்கு, கஸ்தூரியிடம் இருந்த நகைகளை அரிவாளை காட்டி மிரட்டிப் பறித்தார் திவாகர். இதன் பின்னர் கஸ்தூரியை வன்புணர்வு செய்ய முயற்சித்தார். இதனை காதலன் எழில்முதல்வர் தடுக்க போராடினார். அப்போது எழில் முதல்வனை திவாகர் என்ற கட்டவெள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் கஸ்தூரியை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார் திவாகர்” என்பதுதான் போலீஸ் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை.
இந்த சுருளி இரட்டைக் கொலை சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் திவாகர் என்ற கட்டவெள்ளைக்கு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக திவாகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திவாகரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி திவாகர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஜூலை 15-ந் தேதி 77 பக்க தீர்ப்பு வழங்கியது.
அதில், கட்டவெள்ளை என்ற திவாகர் குற்றவாளியே இல்லை; அவருக்கான தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது; திவாகர் மீது வேறு வழக்கு இல்லை எனில் விடுதலை செய்யலாம் என பரபரப்பான தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், எழில்முதல்வன்- கஸ்தூரியை கட்டவெள்ளை என்ற திவாகர் மிரட்டியது, கொலை செய்தது உள்ளிட்டவைகளுக்கு நேரடி சாட்சி இல்லை; கஸ்தூரியின் நகை மட்டுமே காணாமல் போயிருக்கிறது- ஆனால் மோதிரம், செல்போன் உள்ளிட்டவை ஏன் திருடப்படவில்லை? நேரடி சாட்சியங்கள் இல்லாத நிலையில் வாக்குமூலம் கொடுத்த சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல, ராஜ்குமார்- பாக்கியலட்சுமி ஜோடிகள் ஏன் எழில் முதல்வன் – கஸ்தூரியை காப்பாற்ற முன்வரவில்லை? போலீசார் விசாரிக்கும் வரை இந்த சம்பவத்தை போலீசிடம் ஏன் இருவரும் தெரிவிக்கவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் கட்டவெள்ளை என்ற திவாகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான மரபணு பரிசோதனை- விந்தனு பரிசோதனை தொடர்பான அறிக்கைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சந்தேகங்களின் அடிப்படையில் திவாகர் என்ற கட்டவெள்ளை குற்றவாளி இல்லை என விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அப்படியானால் கஸ்தூரி- எழில் முதல்வனை கொலை செய்தது யார்? என்ற கேள்விக்கு விடைதான் இல்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.