கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு வயநாடு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. IMD give warning red alert to kerala wayanad
கேரளா மற்றும் லட்சத்தீவில் கீழ் வெப்பமண்டல மட்டத்தில் வலுவான மேற்கு காற்றுடன் தொடர்ந்து வருகிறது. இதனால் கடந்த 15ஆம் தேதி முதல் மத்திய மற்றும் வடக்கு கேரளாவின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் காசர்கோடில் உள்ள ஹோஸ்துர்க்கில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கண்ணூரில் உள்ள இரிக்கூர், செருவாஞ்சேரி மற்றும் பெரிங்கோம் ஆகிய இடங்களில் தலா 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கண்ணூரில் தலிபரம்பா (16 செ.மீ); காசர்கோட்டில் உள்ள கூடுலு, படன்னக்காடு மற்றும் பயார் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாளை முதல் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா தவிர கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை… தடை… தடை..!
கடந்த ஆண்டு வயநாடு முண்டக்கை-சூரல்மலா பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 பேர் மாண்டனர். அந்த துயரம் இன்னும் ஆறாத நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட புஞ்சிரிமட்டத்தில், தற்போதும் மண் நிலையற்றதாகவே உள்ளது. புன்னப்புழா ஆற்றில் சரிவு ஏற்பட்டால், கீழ்நோக்கி மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதன்காரணமாக சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய முண்டக்கை-சூரல்மலா பகுதிக்கு இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் வெட்டி எடுப்பது மற்றும் ஜேசிபிகளைப் பயன்படுத்தி மண் அள்ளும் நடவடிக்கைகள் உட்பட அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் இருப்பதால், வயநாட்டுக்குச் செல்லும் குட்டியடி மற்றும் தாமரச்சேரி மலைச்சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அவசரகால வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் கனரக வாகனங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.
இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மற்றும் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) போன்ற துறைகள் எந்தவொரு அவசரநிலையையும் கையாள 24 மணி நேரமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
