பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றும் தங்களது ஆயுதங்கள் எப்போதும் மவுனிக்கப்படமாட்டாது என்றும் மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் 150-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் ஆயுதப் போராட்டம் நடத்துவதன் மூலம் கம்யூனிச அரசாங்கத்தை அமைப்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு.
கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
மாவோயிஸ்டுகள் இயக்கம் தொடர்ந்து செயல்பட முடியாத அளவு, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 2,000க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளின் தளபதி உட்பட 60க்கும் மேற்பட்டோர் சரணடைந்தனர்; சத்தீஸ்கரிலும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என அறிவித்துவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் மாவோயிஸ்டுகள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “எங்களது ஆயுதங்கள் மவுனிக்கப்படவில்லை; தற்காலிகமாக பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்த துரோகிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவர்; அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (படம்: A1 மூலம் உருவாக்கப்பட்டது)
