மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கில் உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

Published On:

| By Pandeeswari Gurusamy

மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு எதிராக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் கடந்த 2 மாதங்களாகச் செய்யாத வேலையை ஒரே நாளில் முடித்துவிடுவீர்களா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, ஸ்டாலின் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

சைதை துரைசாமி தரப்பில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஸ்டாலின் வெற்றியை உறுதி செய்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வில் பிப்ரவரி 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சைதை துரைசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகவும், தெளிவின்மை நிறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

ADVERTISEMENT

சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர் ஒரு நாள் அவகாசம் கோரியபோது, நீதிபதிகள் “கடந்த 2 மாதங்களாகச் செய்யாத வேலையை ஒரே நாளில் முடித்துவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கின் விசாரணையை முடிக்கும் வகையில் அடுத்த வாரம் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share