சென்னையில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த்தின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூருக்கு அருகில் உள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபுவின் 6 வயது மகள் ஹாசினி காணாமல் போனார். இதுகுறித்து சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அப்போது குழந்தையின் வீட்டின் அருகில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் காவல்துறையினர் விசாரித்தனர்.இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தஷ்வந்த் ஒப்புக் கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் அவரது தாயையும் கொலை செய்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்த வழக்கில் தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 8) நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றத்தை உறுதி செய்ய காவல்துறை தவறிவிட்டது. அதன் அடிப்படையில் குற்றவாளியை உடனடியாக விடுவிக்க வேண்டும். வீடியோ சிசிடிவி காட்சிகள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.