ஜனநாயகன் பட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வரும் நிலையில் அதில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை.
இதன் காரணமாக அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவில்லை.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவை எதிர்த்தும் சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று (ஜனவரி 15) நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு தொழில்துறை நடைமுறை. அதன்படி தான் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 5000 திரையரங்குகளில் முன்பதிவுகள் நடைபெற்றன’ என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி தீபங்கர் தாத்தா, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி இந்த விவகாரத்தை விரைவாக விசாரித்தது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அதாவது, ‘ அனைத்து நீதிபதிகளும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அவற்றை முடித்து வைப்பதை நாங்கள் வரவேற்போம். ஆனால் இது எல்லா வழக்குகளிலும் நடக்க வேண்டும். இது ஒரு மின்னல் வேகமான செயல்… வழக்கு 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, 7-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது எப்படி? ‘ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து நீதிபதி தீபங்கர் தத்தா, ‘ இந்த விஷயத்தை மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைத்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை எதிர்த்து சவால் செய்யப்படவில்லை என்று தெரிவித்து, ஜனவரி 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘ தணிக்கை வாரியத்தின் முடிவு தீய நோக்கம் கொண்டது’ என்று குறிப்பிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன் இதை சொல்லுங்கள் என்று கூறினர்.
‘ இந்த நீதிமன்றத்தை நீங்கள் அணுகி இருக்கக்கூடியது மிகவும் அதிவேகமான செயல்பாடு. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் 20 தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஏன் இவ்வளவு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்
மேலும்,இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று உறுதியாக கூறிய நீதிபதிகளிடம், ஜனவரி 20-ஆம் தேதியே உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவெடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட எந்த வாதத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், இறுதியாக ‘ நீங்கள் போகலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.
