கமர்ஷியல் ஆக்ஷன், கவர்ச்சி இவற்றோடு காமெடியும் சுந்தர் சி படங்களின் பெரும்பலம். அதுவும் காமெடி அவர் படங்களில் மிக முக்கியமான ஒன்று . படமாக மட்டுமின்றி தனிக் காட்சியாகப் பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும் .
அப்படி சுந்தர் சி படங்களில் வரும் காமெடி காட்சிகளை உடனே தெலுங்குப் படங்களில் சுட்டு பயன்படுத்தி விடுவார்கள்.
ஆரம்பத்தில் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது ஒவ்வொரு படத்திலும் வரும் காமெடிக் காட்சிகளையும் உடனே உடனே தெலுங்குப் படங்களில் சுட்டுப் பயன்படுத்துவதில் ஒரு நிலையில் எரிச்சல் ஆனார் சுந்தர் சி .
அப்போது அவர் தெலுங்குப் படம் ஒன்றை பார்க்க, பதிலுக்கு நாமும் இந்தத் தெலுங்குப் படத்தில் இருந்து ஒரு காட்சியை சுட்டு தனது படத்தில் வைக்கலாம் என்று எண்ணி ஒரு காட்சியைத் தேர்வு செய்தார்.
ஆனால் பின்னர் அது பற்றி யோசித்தபோது அது நன்றாக இல்லை என்று அதை மேம்படுத்தி மாற்றி தனது படத்தில் வைத்தார் .
எந்த படத்தில் இருந்து ஒரு காட்சியை எடுத்து அது சரி இல்லை என்று மேம்படுத்தி சுந்தர் சி வைத்தாரோ அதே படத்தின் இயக்குனர் ……
தான் இயக்கிய அடுத்த படத்தில், சுந்தர் சி மேம்படுத்தி வைத்திருந்த காட்சியை – இது நம்ம படத்தின் காட்சி என்பது தெரியாமலேயே , அப்படியே காப்பி அடித்து வைத்திருந்தாராம்.
அதைப் பார்த்த சுந்தர் சி “யப்பா .. காப்பி அடிப்பதில் உங்களை ஜெயிக்க எங்களால் முடியாதுப்பா.. ” என்று வியந்து போய் நின்றாராம்.
நாகரிகம் கருதி எந்த படம் எந்த இயக்குனர் எந்தக் காட்சிகள் என்று சுந்தர் சி சொல்லவில்லை.
குப்பை அள்ளும் வேலை கூட செய்யலாம் . ஆனால் உலகிலேயே சிறந்த குப்பை அள்ளுபவராக இருக்க வேண்டும் என்பார்கள். சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் அறிவுரை இது.
இந்தப் பழமொழியை காப்பி அடிப்பதற்குப் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் .
சிறப்பான ஈயடிச்சான் காப்பி அடிப்பாளர்கள் !
- ராஜ திருமகன்
