பாஜக மூத்த தலைவருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அமரிந்தர் சிங், காங்கிரஸில் இருந்த போது அவர் மீது வருமான வரித்துறை ஃபெமா வழக்குப்பதிவு செய்தது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி பிரைவேட் வங்கியில் கணக்குகள் வைத்திருந்தது மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வருமான வரித்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்தச் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்துத் தேர்தல் பிரமாணப் பத்திரத்திலோ அல்லது வருமான வரித் தாக்கலின் போதே முறைப்படி தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டியது.
இதனடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில், 2022ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் அமரிந்தர் சிங்.
இதுதொடர்பான வழக்கில் பஞ்சாப் நீதிமன்றம் வருமான வரித்துறை ஆவணங்களின் அடிப்படையில், ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது.
இந்தசூழலில் தான், பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் ஆஜராகுமாறு அமரிந்தர் சிங் மற்றும் அவரது மகன் ரனிந்தர் சிங்கிற்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அமரிந்தர் சிங் அமலாக்கத் துறை முன் ஆஜராகவில்லை. தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அவரது மகனும் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார்.
இந்நிலையில் அமரிந்தர் சிங்கிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் ஜலந்தர் மண்டல அலுவலக அதிகாரி ரவி திவாரி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை அதிகாரியான கூடுதல் இயக்குநர் ரவி திவாரி, செப்டம்பர் 2023 இல் ஜலந்தருக்கு நியமிக்கப்பட்டு, தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அமலாக்கத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பணியிட மாற்றம் வழக்கமான நடைமுறைதான் என்றும் அமலாக்கத் துறை விளக்கமளித்துள்ளது.
