கோவை தெற்கு மாவட்டம் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆளும் திமுகவும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் ஒன் டூ ஒன் என்ற முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஒன் டூ ஒன் சந்திப்பின்போது கோவை தெற்கு மாவட்டம் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக ஆர்.ரமேஷ் என்பவரை நியமித்துள்ளதாகவும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
