சு ஃப்ரம் சோ – விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Su From So Movie Review
Su From So Movie Review

பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல்..!

மிகுந்த காதலுடன் உருவாக்கப்படுகிற திரைப்படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். காரணம், படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் காட்டிய சிரத்தையே, ரசிகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான ஈர்ப்பை அப்படைப்புக்குள் பொதித்து வைக்கும். அந்த வகையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘சு ஃப்ரம் சோ’ கன்னடப் படத்தின் வெற்றி.

ADVERTISEMENT

நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், கர்நாடகாவில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

கடந்த வாரம் இப்படத்தின் மலையாளப் பதிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த வாரம் தெலுங்கு பதிப்பு வெளியாகவிருக்கிறது.

ADVERTISEMENT

‘கூலி’ பரபரப்பு மட்டும் இல்லாவிட்டால், அடுத்த வாரம் தமிழிலும் இது ரிலீஸ் ஆகும் நிலை உருவாகியிருக்கலாம்.

சரி, பட்ஜெட்டை விடப் பல மடங்கு வசூல் குவிக்கிற அளவுக்கு இந்தப் படத்தில் என்ன புதுமை இருக்கிறது?

ADVERTISEMENT

கதையில் புதுமையா?

Su From So Movie Review

‘சு ஃப்ரம் சோ’ என்றால் ‘சுலோசனா ஃப்ரம் சோமேஸ்வரா’ என்று அர்த்தம்.

இந்த படத்தின் கதை கர்நாடகாவின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது.

மர்லூர் எனும் கிராமம். அங்கிருக்கும் இளைஞர்களில் ஒருவரான அசோகா (ஜே.பி.துமிநாட்), மொபைல் யுகத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார். கட்டட வேலைகள் மேற்கொள்ளும் காண்ட்ராக்டர் ரவியின் (ஷனீல் கௌதம்) பணியாட்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அக்கம்பக்கத்து வட்டாரத்தில் உள்ள பெண்களின் அந்தரங்க வீடியோ சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆனால் அதனைப் பகிர்வது அவரது சகாக்களின் வழக்கம்.

நடுத்தர வயதை எட்டிய ரவியைப் பார்த்து ஊரே பயப்படுவது போல, அசோகாவும் பயந்து நடுங்குகிறார். ஊரில் என்ன நடந்தாலும் முதல் ஆளாகத் தலை நீட்டும் ரவி, இப்போதும் ‘எலிஜிபிள் பேச்சுலர்’ ஆகவே இருக்கிறார். ஆனால், அவரது வலிமைக்கும் துணிச்சலுக்கும் முன்னால் இளைஞர்கள் கூடப் பின்னால் தான் நிற்க வேண்டும்.

இந்த நிலையில், ரவியின் மீதே கைநீட்டும் அளவுக்கு ஒரு சம்பவத்தைச் செய்கிறார் அசோகா.

வேறொன்றுமில்லை, ஒரு திருமண விழாவுக்காக ஊரே கூடி நிற்கிறபோது, ஒரு வீட்டின் குளியலறையில் எட்டிப் பார்த்துவிடுகிறார் அசோகா. அந்த வீட்டில் அவரை ஈர்த்த இளம்பெண் ஒருவர் இருக்கிறார்.

குளியலறையில் இருந்ததோ அந்தப் பெண்ணின் பாட்டி. அதனால், அவருக்கு எட்டி பார்த்தது யார் என்று தெரியவில்லை. ஆனாலும், எப்படியாவது அந்த நபரைப் பிடித்துவிட வேண்டும் என்று ரவியும் அவரது அல்லக்கைகளும் பேசுகின்றனர். ’போலீஸை வச்சு பிங்கர் பிரிண்ட் எடுத்துர வேண்டியதுதான்’ என்கின்றனர்.

அதனைக் கேட்டு பயமுறும் அசோகா, நள்ளிரவில் தனது கைரேகை தடங்களை அழிக்க அங்கு மீண்டும் வருகிறார். அப்போது, இரண்டு நபர்களிடம் அவர் வசமாக மாட்டிக்கொள்கிறார்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, தனக்கு பேய் பிடித்தது போன்று நாடகமாடுகிறார்.

Su From So Movie Review

அடுத்த நாள் காலையில் அது விஸ்வரூப பிரச்சனையாக உருவெடுக்கிறது. ஊரே அசோகாவைக் கண்டு பயப்படுகிறது.

அதனைக் கண்டு மகிழ்ச்சியுறும் அசோகா, விளையாட்டாகத் தனது நடிப்பைத் தொடர்கிறார். அதன் ஒரு பகுதியாக, யாருமே எதிர்த்துப் பேசத் துணியாத ரவியை அடித்துவிடுகிறார்.

அந்த ஒரு சம்பவம், அசோகாவைப் பிடித்துள்ளது பேய்தான் என்று அந்த ஊராரை ஆணித்தரமாக நம்ப வைக்கிறது. அந்த நம்பிக்கை, அசோகாவின் இயல்பு வாழ்வை குலைத்துப் போடுகிறது.

அதன்பின் என்னவானது என்பதே ‘சு ஃப்ரம் சோ’ படத்தின் மீதி.

அந்த பேயின் பின்னணியை அறிய ஊர் மக்கள் முற்படுவதும், பிற்பாடு அதனை விரட்டியடிக்க ஒரு போலி சாமியாரை அழைத்து வருவதும் ‘வயிறு வலிக்க’ச் சிரிக்க வைக்கும் ‘எபிசோடுகள்’.

நகைச்சுவையை மீறி, ஒரு பெண்ணைச் சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதும் இக்கதையின் அடியோட்டமாக இருக்கிறது.

குறிப்பாக, திருமண வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாக இருக்கும் பெண்கள் தனியாக வசிக்க நேர்ந்தால் அவ்வூரைச் சேர்ந்த ஆண்களின் பார்வை எப்படிப்பட்டதாக இருக்குமென்று பேசுகிறது. அதுவே இப்படத்தின் பின்பாதியைச் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

நிச்சயமாக, ‘சு ஃப்ரம் சோ’ கதை புதுமையானதல்ல. ஆனால், ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் மிக வித்தியாசமான மனிதர்களைக் காட்டிய விதத்தில், அந்த உலகத்தைக் காட்சிப்படுத்திய வகையில் பிரமிக்க வைக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அழகான காட்சியனுபவம்!

Su From So Movie Review

’ஒண்டு மொட்டய கதே’, ‘கருட கமன விரிஷப வாகன’, ‘டோபி’ எனக் கடந்த பத்தாண்டுகளில் ராஜ் பி ஷெட்டி நடித்த படங்கள் கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதே இதன் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது. கொடூரமான வில்லனாகச் சமீபகாலமாக நடித்து வரும் இவர், இந்தக் கதையில் போலிச்சாமியாராக வந்து சிரிக்க வைக்கிறார்.

இதனை இயக்கியுள்ள ஜே.பி.துமிநாட், இப்படத்தின் நாயக பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

’காந்தாரா’வில் ரிஷப் ஷெட்டி எத்தகைய மேஜிக்கை செய்தாரோ, கிட்டத்தட்ட அதனை வேறுவிதமாக ’சு ஃப்ரம் சோ’வில் ஜே.பி.துமிநாட் பிரதியெடுத்திருக்கிறார். ‘காப்பி அடித்தாலும் ஒரிஜினலாக சில விஷயங்கள் தெரிந்தாக வேண்டும்’ என்கிற நியதியை அவர் கடைப்பிடித்திருப்பதாக எண்ண வைக்கிறார். அதுவே, ஒரு இயக்குனராக அவரை வெற்றி அடையச் செய்திருக்கிறது.

இப்படத்தில் ரவி ஆக ஷனீல் கௌதம், சுலோசனா என்பவரின் மகள் பானுவாக சந்தியா அரகெரே, ஆட்டோ ஓட்டுநர் சந்திராவாக பிரகாஷ் துமிநாட், சதீஷா எனும் பாத்திரத்தில் தீபக் ராய், பாவா எனும் பாத்திரத்தில் புஷ்பராஜ் போலார் நடித்துள்ளனர்.

இதுபோக நாயகனின் நண்பர்கள், குடும்பத்தினர், பெட்டிக்கடை வைத்திருப்பவர், புது மாப்பிள்ளை, அவரது வீட்டினர், சோமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரின் முகங்களும் மனதில் பதியுமாறு ‘பாத்திர வார்ப்பு’ அமைந்திருப்பதே இப்படத்தைத் தனித்துவமானதாக மாற்றியிருக்கிறது.

வடக்கு கர்நாடகாவின் பசுமைமிக்க கிராமம் ஒன்றை நேரில் பார்த்த உணர்வைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.சந்திரசேகரன். பல இடங்களில் அவரது ‘கேண்டிட் ஷாட்’கள் நாமே படத்தில் ஒரு பாத்திரமாக மாறியதாக உணர வைக்கிறது.

படத்தொகுப்பாளர் நிதின் ஷெட்டி இதில் ஒரு இடத்தில் கூட ‘எக்ஸ்ட்ரா’வாக ஒரு பிரேமை காட்டவில்லை. ரசிகர்கள் கதையைப் புரிந்துகொள்வதில் அவரது உழைப்பு அபாரம்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் சுஷ்மா நாயக் நிஜமாகவே நாம் அந்த கிராமத்திற்குச் சென்றுவிட்ட ‘எபெக்டை’ திரையில் உண்டுபண்ணியிருக்கிறார்.

சுமேத்தின் இசையில் பாடல்கள் நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன.

Su From So Movie Review

அதனை ‘அலேக்’காக தாண்டுவது போன்று பின்னணி இசை வழியே நம்மைச் சிரிக்க, பயமுற, நெகிழ்ச்சியுற வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தீப் துளசிதாஸ்.

இவர்களோடு இதர தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பங்களித்திருப்பதால், இப்படம் தரும் திரையனுபவம் மனதுக்கு இதமாக உள்ளது.

‘காமெடி ட்ராமா’ என்பதை மீறி, தொடக்கம் முதல் இறுதி வரை நூல் பிடித்தாற்போலக் காட்சிகளை கோர்த்து கதை நிகழ்கிற களத்திற்கே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜே.பி.துமிநாட். அதுவே இப்படத்தின் பலம்.

அடுத்தடுத்த படங்களிலும் இதே போன்ற திரையனுபவத்தைத் தந்தால், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக ஜே.பி.துமிநாட் மாறக்கூடும்.

எளிமையான ஒரு கதை. தனித்துவமாகச் சில பாத்திரங்கள். இதுவரை கன்னட சினிமா காணாத ஒரு களம். அவற்றின் ஊடே சமூக அவலங்களைச் சாடுகிற குரலும் இப்படத்தில் உண்டு. ஆனால், அதனைப் பிரசாரமாக அல்லாமல் சிறப்பான கதை சொல்லல் வழியே சாதித்திருக்கிறார் ஜே.பி.துமிநாட்.

காமெடி படங்களில் ‘டைமிங்’ என்பது மிக முக்கியம். இந்த படத்தில் அது அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழில் தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன் போன்ற பல ஜாம்பவான் கலைஞர்கள் அதனை ‘அநாயாசமாக’ திரையில் வெளிப்படுத்தியிருப்பதை நாம் கண்டிருப்போம். கிட்டத்தட்ட அப்படியொரு காட்சியனுபவத்தைத் தருகிறது ‘சு ஃப்ரம் சோ’. அதனைக் கண்டு ரசிக்க விரும்பினாலே போதும்; இந்தப் படம் உங்களுக்குப் பிடித்துப் போகும்.

தமிழ் பதிப்பு விரைவில் வெளியாகும் என்றாலும், இதனைக் கன்னடத்திலேயே கூடப் பார்த்து ரசிக்கலாம். ஏனென்றால், நிறைய பழந்தமிழ் சொற்கள் இப்படத்தின் வசனங்களில் நிறைந்திருக்கின்றன. அதனால், ஒருகட்டத்தில் ‘சப்டைட்டில்’ துணை இல்லாமலேயே இப்படத்தை ரசிக்கிற அனுபவமும் கிடைக்கும்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share