Surrender Movie Review
எதிர்பாராத ஒரு ஆச்சர்யம்..!
குற்றங்கள் சர்வசாதாரணமாக நிகழ்கிற சூழல், அதோடு பின்னிப் பிணைந்த மனிதர்கள், அவர்களது வன்மம் எனச் சுழல்கிற உலகத்தில் நீதி, நேர்மை பேசுகிற நியாயவான்கள் சிக்கிக் கொண்டால் என்னவாகும்? அப்படியொரு எண்ணத்தைத் தோற்றுவித்தது கௌதமன் கணபதி இயக்கிய ‘சரண்டர்’ படத்தின் ட்ரெய்லர்.
’பிக்பாஸ்’ தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனீஸ்காந்த், பாடினி குமார் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் ஒளிப்பதிவினை மெய்யேந்திரனும் இசையமைப்பை விகாஸ் படிசாவும் கையாண்டுள்ளனர்.
‘சரண்டர்’ தரும் திரையனுபவம் எத்தகையது?
திரைக்கதை திருப்பங்கள்!
சட்டமன்றத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பாக நிகழ்கிற சம்பவங்களையும் அவற்றின் பின்னணியையும் விவரிக்கிறது ‘சரண்டர்’ திரைக்கதை.
சென்னை அருகேயுள்ள திருமழிசை காவல்நிலையத்தில் புதிதாகச் சேர்கிறார் பயிற்சி நிலையில் இருக்கும் ஒரு புதிய சப் இன்ஸ்பெக்டர். அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் உற்றுநோக்குகிறார்; அவர்களுக்குத் தகுந்தாற்போலத் தனது பேச்சு, நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறார்.
அந்த வகையில், ஆறு மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் ஒரு எழுத்தரை அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு பிடித்துப் போகிறது.

தேர்தலுக்கு ஐந்து நாட்கள் முன்பாக, ஒரு நடிகர் தனது துப்பாக்கியை ‘சரண்டர்’ செய்ய வருகிறார். தேர்தல் முடிந்ததுமே தான் அதனை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறார்.
அதன்படி அந்த எழுத்தரும் அந்த துப்பாக்கியை லாக்கரில் வைத்து சீல் செய்கிறார்.
அடுத்த நாளே அதனை எடுத்துச் சரிபார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால், அவர் லாக்கரை திறந்து பார்த்தால் துப்பாக்கி இல்லை. அந்த எழுத்தருக்கு ‘பகீர்’ என்றாகிறது.
உடனே இன்ஸ்பெக்டருக்கு விஷயம் தெரிய வர, தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த துப்பாக்கியைக் கண்டறிகிற பொறுப்பை பயிற்சி சப் இன்ஸ்பெக்டருக்கு வழங்குகிறார். துணைக்கு இரண்டு கான்ஸ்டபிள்களையும் நியமிக்கிறார்.
இதற்கிடையே, தேர்தலுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்காகத் தன்னிடமுள்ள பத்து கோடி ரூபாயைக் கொடுத்தனுப்புகிறார் ஒரு ரவுடி. அதனைக் கொண்டு செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியின் கார் விபத்துக்குள்ளாகிறது. அவரது காரில் பணம் இல்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அந்த போலீஸ் அதிகாரி, பணம் எங்கே போனது எனத் தனக்கு தெரியாது என ரவுடியிடம் கூறுகிறார்.
அதைக் கேட்டு ஆத்திரமடையும் அந்த ரவுடி, அந்த பணத்தை உடனடியாகக் கண்டுபிடித்து தேர்தலுக்கு முந்தைய நாள் தான் சொன்ன இடத்தில் ஒப்படைக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார். அதனைக் கண்டுபிடிக்குமாறு தனது அடியாட்களுக்குக் கட்டளையிடுகிறார். அந்த போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையும் கண்காணிக்கச் சொல்கிறார்.
இதற்கிடையே, அந்த ரவுடியின் தம்பிக்கும் எழுத்தருக்கும் முட்டிக் கொள்ளும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. அது அந்த ரவுடியின் கவனத்திற்குச் செல்ல, எழுத்தரின் இயல்பு வாழ்வு முற்றிலுமாகச் சீர்குலைகிறது.
பணியில் அடுத்தடுத்து நிகழ்கிற சிக்கல்களில் இருந்து அந்த எழுத்தரால் மீள முடிந்ததா? பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அவை தீர என்ன செய்தார்? அந்த ரவுடி கொடுத்தனுப்பிய பணம் என்னவானது என்பதைச் சொல்கிறது ‘சரண்டர்’ படத்தின் மீதி.
இந்த கதைக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாமல், திருச்சியில் இருந்து சிலர் துப்பாக்கி வாங்கச் சென்னை வருவதாக ஒரு கிளைக்கதை உண்டு. ‘நானும் ரவுடிதான்’ என்கிற ரேஞ்சில் தங்களைக் காட்டிக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்கிற முயற்சி என்னவானது என்றும் சொல்கிறது ‘சரண்டர்’ திரைக்கதை.
இத்திரைக்கதையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் இருக்கின்றன. அந்த சம்பவங்களே அதற்கடுத்து வருகிற காட்சிகளைத் தீர்மானிப்பதாக உள்ளன. அந்த வகையில், அனைத்து காட்சிகளும் பாத்திரங்களும் கதையின் மையச் சரடு உடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப, இப்படத்தின் காட்சியாக்கமும் அமைந்திருப்பதே ‘சரண்டர்’ படத்தின் யுஎஸ்பி.

இயக்குனரின் ‘காட்சிக்கூர்மை’!
நடிப்பைப் பொறுத்தவரை, நாயகன் தர்ஷனை ‘ஆஹா.. ஓஹோ..’ என்று பாராட்ட முடியவில்லை. ஆனால், படம் முழுக்க ஒரு குறிப்பிட்ட மனிதரையே பார்க்கிறோம் என்ற உணர்வை வடிவமைத்திருக்கிறார். அதனைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
இதில் நாயகி என்று யாருமில்லை. ஆனால், பாடினி குமார் இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கிறார். அதில் அவர் நாயகிக்கே உரித்தான முக்கியத்துவத்துடன் திரையில் ஒளிர்கிறார்.
லாலுக்கு இதில் மிக முக்கியமான பாத்திரம். அதனை அவர் வெகுசாதாரணமாக, அதேநேரத்தில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
வில்லன்களில் ஒருவரான சுஜித் சங்கர் இதில் தனது நடிப்பால் வசீகரிக்கிறார். மலையாளம் கலந்த தமிழ் பேசிவிடுவாரோ என்ற பயத்தில் அவருக்கு வேறொருவரை ‘டப்பிங்’ பேச வைத்திருக்கின்றனர். அதுதான் கொஞ்சம் செயற்கையாகத் தெரிகிறது.
இன்னும் அருள்சங்கர், ஹலோ கந்தசாகி, ரம்யா, செம்மலர் அன்னம், கருப்பு நம்பியார் எனப் பலர் இதிலுண்டு. அவர்களோடு சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் வந்து போயிருப்பார்கள்.
அனைவரையும் நினைவில் கொள்ளும் வகையில், அவர்களது பாத்திர வார்ப்பு இருப்பதே இத்திரைக்கதையில் சிறப்புகளில் தலையாயது.
இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் வந்து போகிறார். ஒரு பாத்திரமாக அல்லாமல், அவராகவே தலைகாட்டியிருக்கிறார். அது ரசிக்கும்படி இருக்கிறது.
‘கேங்ஸ்டர்’ படங்களில் பல காட்சிகள் பாதியில் ஆரம்பிப்பதாக அல்லது முடிவடைவதாக இருக்கும். என்னதான் கதைக்களம் விஸ்தாரமாகத் திரையில் காட்டப்பட்டாலும், அதில் உலவும் மனிதர்களை ‘குளோஸ் அப்’பில் காட்டினால் மட்டுமே உணர்வுகள் ரசிகர்கள் மனதில் பதியும்.
அனைத்தையும் தாண்டி, ஒவ்வொரு காட்சியிலும் கூடுதலாக ஒரு பிரேம் காட்டப்பட்டாலும், அது திரைக்கதையின் சீர்மையைச் சிதைத்துவிடும். கதாபாத்திரங்களோடு ஒரு கதாபாத்திரமாக ரசிகர்கள் மாறுவதைத் தடுத்துவிடும்.
அந்த நுட்பத்தை உணர்ந்து, அளவெடுத்தாற்போல ஒவ்வொரு காட்சியையும் ஷாட்டையும் நிர்ணயித்திருக்கிறார் இயக்குனர் கௌதமன் கணபதி. காட்சிக்கூர்மையில் அவர் கொண்டிருக்கிற திறமை, அடுத்தடுத்து பல நல்ல நடிகர்களோடு இணைகிற வாய்ப்புகளை அவருக்குப் பெற்றுத் தர வேண்டும்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் படம் முழுக்கக் குறிப்பிட்ட வண்ணங்களைப் பயன்படுத்தி, கதையில் இருக்கிற பதற்றம் நம்மைத் தொற்றிக்கொள்ளுமாறு பார்த்துக் கொள்கிறார். ஏற்கனவே சொன்னது போல, ரொம்ப நேர்த்தியாக ஒவ்வொரு பிரேமையும் ‘கட்’ செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரேணு கோபால்.
ஒவ்வொரு பிரேமும் செறிவாகத் தெரிய தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலை இயக்குனர் ஆர்.கே. மனோஜ்குமார்.
இசையமைப்பாளர் விகாஸ் படிசா, மிகச் சில காட்சிகளைத் தனது பின்னணி இசை மூலம் வேறொரு உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். ரசிகர்கள் உணர்வெழுச்சியைத் தூண்டுவதாக அந்த இடங்கள் அமைந்திருப்பதே அவரது இசைத்திறனைக் கொண்டாட வைக்கிறது.
இதுபோக ஒப்பனை, ஒலி வடிவமைப்பு என்று பல நுட்பங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதிக பொருட்செலவு இல்லாமல், மிகப்பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இல்லாமல், இப்படியொரு படத்தை நேர்த்தியாகத் தருவது ஒரு அசாத்தியமான காரியம். அதனைச் செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் கௌதமன் கணபதி.
அந்த வகையில், ஒரு இயக்குனரின் படைப்பாக மிளிர்கிறது ‘சரண்டர்’. இதில் புதிதாகக் கதையோ, கதாபாத்திர வார்ப்போ இல்லை. அதையும் மீறி, ‘அடுத்தது என்ன’ என்று ரசிகர்கள் யோசிக்கிற வகையில் எதிர்பாராத ஆச்சர்யத்தைத் தருகிறது இப்படம். ’சரண்டர்’ இயக்குனர் கௌதமன் கணபதி மற்றும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்..!
