சென்னையில் காதல் தகராறில் கல்லூரி மாணவரை காரை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நிதின்சாய், சென்னை கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாய், அவரது நண்பர் அபிஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சென்னை திருமங்கலம் அருகே சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே நிதின்சாய் உயிரிழந்தார்.

இது தொடர்பாக திருமங்கலம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, இது விபத்து அல்ல.. திட்டமிட்டு நடந்த படுகொலை என்பது தெரியவந்தது.
படுகொலையின் பின்னணியும் திமுக பிரமுகரின் பேரனும்
இது பற்றி போலீஸ் தரப்பில், நிதின்சாயின் நண்பர் வெங்கடேஷ், மாணவி ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த மாணவி, வெங்கடேஷ் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் வெங்கடேஷும் மாணவியை துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவி தரப்பில், பிரணவ் என்பவர் மூலம் ‘காதல் டார்ச்சர்’ கொடுத்து வந்த வெங்கடேஷ் மிரட்டப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஒன்றில் நடந்த பிறந்த நாள் விழாவிலும் இந்த காதல் விவகாரத்தில் வெங்கடேஷ்- பிரணவ் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது வெங்கடேஷுக்கு ஆதரவாக சண்டை போட்ட நிதின்சாய், அபிஷேக் ஆகியோர் சொகுசு கார் ஒன்றை அடித்து நொறுக்கினர்.
ஹோட்டல் சண்டை முடிந்த பின்னர் நிதின்சாய், அபிஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான், திருமங்கலம் பகுதியில் பிரணவ் மற்றும் அவரது நண்பர்கள் சொகுசு காரில் வந்து நிதின்சாய்- அபிஷேக் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி இருக்கின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே நிதின்சாய் துடிதுடித்து இறந்தார் என்கின்றனர்.
நிதின்சாய், அபிஷேக் மீது சொகுசு கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நிதின்சாய்- அபிஷேக் மீது மோதிய சொகுசு காரை ஓட்டியது சந்துரு என்பவர் என தெரிய வந்தது. இவர், சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரின் பேரன் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். வெங்கடேஷுடன் தகராறு செய்த பிரணவ்வின் நண்பர்தான் சந்துரு.
இதனையடுத்து சிசிடிவி காட்சி பதிவுகள் அடிப்படையில் பிரணவ், அவரது நண்பர்கள் சுதன் மற்றும் கேகே நகர் திமுக பிரமுகரின் பேரன் சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவி செய்ய போய் கொலையில் முடிந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.