ADVERTISEMENT

விஜய் மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர்… மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி!

Published On:

| By easwari minnambalam

student dies being electrocuted at TVK conference

ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் தவெக மதுரை மாநில மாநாட்டிற்கு பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 லட்சம் பேரை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்‘ என்ற வாசகத்தை பிரதானமாக பயன்படுத்தி தவெக மாநாடு மேடையின் உச்சியில் திமுக நிறுவனர் அண்ணா, மற்றும் அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகிய இருவரின் படங்களும் இடம் பெற்றுள்ளது. இடையில் விஜய் படம் இடம் பெற்றுள்ள நிலையில் வாகை சூடும்…வரலாறு திரும்புகிறது என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் உச்சகட்ட வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவே பொதுமக்கள் பலரும் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருகைத் தந்தனர்.

ADVERTISEMENT

“ஏங்க… பாரபத்தி மாநாட்டுக்கு வாங்க…” என்று அங்கு கூடியிருந்த பெண்கள் கூமாபட்டி இளைஞர் பாஷையில் அழைப்பு விடுத்த வீடியோக்களையும் தவெகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி என்பவரது மகன் காளீஸ்வரன் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது அருகில் இருந்த கம்பியை எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

ஆனால் காளீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share