தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான கரூர் மாவட்டத்துக்குள் நுழைவதற்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான நிலையில், கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு பதற்றமோ அசம்பாவிதமோ ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ஏடிஜிபி ADGP) டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கரூர் மாவட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் நாம் விசாரித்த போது, வெளி மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்தவர்கள், கரூர் மாவட்டத்துக்குள் நுழைந்து நீதி கேட்கிறோம் என்று போராட்டம் நடத்தி அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக சிவில் உடையிலும் சீருடையிலும் கவனமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கரூர் மாவட்டத்துக்குள் கூட்டமாக வருவதறகு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவுகள் விவரம்:
- BNS பிரிவு 105 – திட்டமிடாத ஆனால் கொலைக்கான தண்டனை
- BNS பிரிவு 110 – திட்டமிடாத கொலை செய்ய முயற்சித்தல்
- BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
- BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ் படியாமை குற்றமாக்கப்படுகிறது.
- TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல்