இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளாலும், பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சுற்றும் தெருநாய்களாலும் ஏற்படும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று (நவம்பர் 7) பிறப்பித்துள்ளது.
தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ஏற்கனவே டெல்லியில் பொதுவெளியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது.
இந்தநிலையில் இன்று (நவம்பர் 7) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இதற்காக, நகராட்சி அதிகாரிகள், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொதுப்பணித் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பிடிபடும் விலங்குகள் அனைத்தும் நியமிக்கப்பட்ட தங்குமிடங்கள் அல்லது “கோசாலைகளுக்கு” மாற்றப்பட்டு, கால்நடைப் பராமரிப்புச் சட்டங்கள் மற்றும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றின்படி அத்தியாவசிய கால்நடைப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.
சாலைகளில் உள்ள தெரு விலங்குகளைக் கையாளவும், 24 மணி நேரமும் செயல்படவும், உள்ளூர் காவல் நிலையங்கள், கால்நடை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் பிரத்யேக நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
பயணிகள் தெரு விலங்குகள் அல்லது அவற்றால் ஏற்படும் விபத்துகள் குறித்து புகார் அளிக்க நெடுஞ்சாலைகளில் ஹெல்ப்லைன் எண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இந்த ஹெல்ப்லைன்கள் உள்ளூர் காவல்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
நாய்க்கடி சம்பவங்கள் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொது விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நெரு நாய்கள் நுழையாத அளவுக்கு 8 வாரங்களுக்குள் வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.
பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டாலும், அதே இடத்தில் மீண்டும் விடப்படக்கூடாது. விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி (Animal Birth Control Rules) நாய்களுக்கான காப்பகங்களில் வைக்க வேண்டியது உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் தெருநாய்களுக்காக 72 புதிய காப்பகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய 450 கால்நடை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 500 உதவி மருத்துவர்கள் மற்றும் 500 உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
