வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை, நாகை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் இன்று (செப்டம்பர் 27) இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த 25ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, நாகப்பட்டினம், பாம்பன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை காரணமாக இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது, துறைமுகத்திலிருந்து கணிசமான தூரத்தில் புயல் உருவாகி உள்ளதை குறிக்கும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும், துறைமுகம் இன்னும் மோசமான வானிலையை எதிர்கொள்ளவில்லை என்பதையும் இது குறிக்கிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் :
நாளை வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் :
28ஆம் தேதி வரை தெற்கு மத்திய வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய தெற்கு வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள் மற்றும் ஆந்திரா ஒரிசா மேற்கு வங்க கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.