சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கார்களில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் பாமக கட்சி உறுப்பினர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி வீட்டின் துக்க நிகழ்வில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொண்டனர்.
பின்னர் பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது அன்புமணி ஆதரவாளர்கள் காரை வழி மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்கள் சிலர் அருள் எம்எல்ஏ கார் உட்பட ஆதரவாளர்களின் கார்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ அருள் ஆதரவாளர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல் வீசியதோடு, கட்டைகளை கொண்டும் தாக்கியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போலீசாரைரே தள்ளிவிட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
இச்சம்பவம் குறித்து சேலம் அருள் எம்எல்ஏ கூறுகையில், “ஜெயபிரகாஷ் ஆதரவாளர்கள், 15 க்கும் மேற்பட்டோர் ‘அன்புமணி வாழ்க’ எனக்கூறி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரின் மீது தாக்குதல் நடத்தினர்.
வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒன்றியச்செயலாளரின் அப்பா இறந்த நிகழ்வுக்கு சென்றுவிட்டு வரும்போது தாக்குதல் நடத்தினர். நான் காரை விட்டு இறங்கி இருந்தால் கொல்லப்பட்டிருப்பேன். என்னுடன் வந்த ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு வந்த காவலரும் காயமடைந்தார். 6 கார்கள் சேதம் அடைந்துள்ளன.
நாங்கள் அராஜகத்தை நம்புவர்கள் அல்ல. சட்டத்தை நம்புபவர்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.
அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினர். என்ன நடந்ததோ அதை அப்படியே காவல் துறையில் புகாரளிக்க தலைவர் கூறியுள்ளார்.
மேலும் அராஜகத்தை கையில் எடுக்க வேண்டாம், நல்ல இளைஞர்களை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம்” என அன்புமணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையில் அன்புமணி, மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
