ஸ்டாலினிடம் விஜய் கேட்ட அதே கேள்வியை அப்படியே கேட்கும் எடப்பாடி

Published On:

| By Mathi

AIADMK Edappadi

2026 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறி வருகிறார்.

இதனை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். மேலும், இது என்ன டெல்லிக்கு நடக்கிற தேர்தலா? எனவும் விஜய் கேள்வி எழுப்பி இருந்தார். அதே கேள்வியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT

மதுரவாயல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது: நடைபெறுகின்ற தேர்தலில் ராஜ்யம் யாருக்கு? நம்மோட கூட்டணிக்குத்தான் ராஜ்யம். யாருக்குப் பூஜ்ஜியம்? ஸ்டாலினின் தலைமையில் இருக்கின்ற கூட்டணிக்கு. அதனால ஸ்டாலின் அவர்களே, பூஜ்ஜியத்தைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து உங்களது காலம்தான் வீணாகும் என்பதை இந்த நேரத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன்.

ரூ 5,000 vs ரூ.10,000

ADVERTISEMENT

இன்று ஸ்டாலின் பேசுகிறார்; அவர் 5,000 ரூபாய் அறிவித்தால்தான் அது இன்று நாட்டில் ‘சூப்பர் ஹிட்’ ஆனதாம். பிப்ரவரி மாதம் உரிமைத் தொகை கிடையாது, மார்ச் மாதம் உரிமைத் தொகை கிடையாது, ஏப்ரல் மாதம் உரிமைத் தொகை கிடையாது. அந்த மூன்று மாத உரிமைத் தொகையைச் சேர்த்து ‘கோடைக்கால நிதி’ ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 கொடுத்திருக்கிறார். எதுக்கு? நான் சொன்னது போல ஸ்டாலினுக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது.

சிந்தித்துப் பாருங்கள்; ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார், அவ்வளவுதான். இவர் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் இது ஒரு ‘Ongoing Scheme’ (தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டம்). இது செயல்பாட்டில் இருக்கும். இவர் அறிவிக்காவிட்டாலும் பிப்ரவரி மாதம் அந்த உரிமைத் தொகை மக்களுக்குப் போய்க் கிடைக்கும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் அந்தக் குடும்பத் தலைவிகளுக்கு அந்த உரிமைத் தொகை கிடைக்கும். ஆனால், இவர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, ஏதோ மக்களுக்குப் பெரிய தொகையைக் கொடுப்பதைப் போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ஒரு கவர்ச்சிகரமாக இதை அறிவித்து மக்களின் வாக்குகளைப் பெறுவதற்குத் தந்திரமாக ஸ்டாலின் எடுத்த முடிவுதான் இந்த அறிவிப்பு.

ADVERTISEMENT

கோடைக்காலத்தில் ரூ.2,000 கொடுக்கிறாராம். இப்போதுதான் கோடைக்காலம் வருகிறதா? 2026-ல்தான் கோடைக்காலம் வருகிறதா? எல்லாக் கோடைக்காலங்களிலும் மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதலமைச்சர், இன்றைய தினம் தேர்தல் வந்த காரணத்தால் இந்தக் கோடை நிதியைக் கொடுத்திருக்கிறார். எவ்வளவு தந்திரம் பாருங்கள்!

விலைவாசி உயர்வு

திரு. ஸ்டாலின் அவர்களே, இதுவல்ல சூப்பர் ஹிட். நாங்கள் 10,000 ரூபாய் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட். உங்களுடைய ஆட்சியில் விலைவாசி விண்ணைத் தொடுகின்ற அளவுக்கு உயர்ந்து போய்விட்டது. விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்வு. இன்று நகர மக்கள், மாநகராட்சியில் வாழ்கின்ற மக்கள், பேரூராட்சி மக்கள் என அனைத்து மக்களுக்கும் வீட்டு வரி 100 சதவீதம் உயர்வு. ஆயிரம் ரூபாய் வீட்டு வரி கட்டியவர்கள் இன்று ரூ2,000 கட்ட வேண்டும். கடை வரி 150 சதவீதம் உயர்வு. அதிமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாயாக இருந்த கடை வரி, திமுக ஆட்சியில் ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி 6 சதவீதம் உயர்ந்து கொண்டே போகும்.

மின் கட்டணம் உயர்வு

அதுமட்டுமல்ல, மின் கட்டணம் கிட்டத்தட்ட 57 சதவீதம் உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டினால், அதை இப்போது இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி உயர்வு என வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாங்கம் இது. அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், அதிமுக தேர்தல் அறிக்கையில் எல்லா குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ஒரே கட்டமாகப் ரூ.10,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். அந்த நிதிச்சுமையைக் குறைப்பதற்காக உதவித்தொகை அறிவித்தோம்.

திமுகவின் முழக்கங்களும் திட்டங்களும்

ஸ்டாலினால் இதைப் பொறுக்க முடியவில்லை, பதறுகிறார். “வாயில் வடை சுடுகிறார்கள்” என்கிறார். நீங்கள்தான் ஐயா வாயில் வடை சுடுகிறீர்கள். ஐந்து வருடமாக வடை சுட்டு வடை சுட்டு மக்களுக்கு உங்கள் ஆட்சியின் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஐந்து வருடத்தில் எத்தனை பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்? கொஞ்ச நஞ்ச பெயர்கள் இல்லை; அவ்வளவு பெயர்கள். இதில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா என்று பாருங்கள்: “வெல்வோம் ஒன்றாக”, “எல்லோருக்கும் எல்லாமும்”, “ஓரணியில் தமிழ்நாடு”, “ஒன்றிணைந்து வா”, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, “உங்களுடன் ஸ்டாலின்”, “மக்களைத் தேடி மருத்துவம்”, “இல்லம் தேடிக் கல்வி”, “நான் முதல்வன்”, “தமிழ் முதல்வன்”, “புதுமைப் பெண்”. “உங்கள் கனவைச் சொல்லுங்கள்”, “முதல்வரின் முகவரியில் உங்கள் கனவைச் சொல்லுங்கள்” –

மக்களிடம் போய்க் கேட்டால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது.

பெயர் வைப்பதில் நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தப் பெயர்களில் அடங்கியிருக்கும் திட்டங்கள் மக்களுக்குத் தெரியுமா? தினமொரு பெயர் வைப்பார், ஒரு திட்டத்தை அறிவிப்பார், அங்கே போட்டோ ஷூட் எடுப்பார், அது பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வரும் – அதோடு முடிந்துவிட்டது. இப்படிப் பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை ஸ்டாலினுக்குக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். நாட்டு மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்! “வாயில் வடை சுடுவது” என்றால் அது ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும். இப்படி ஐந்து ஆண்டு காலம் ஏமாற்றிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு முடிவு கட்டும் தேர்தல்தான் இந்தச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்.

முடிவு கட்டிவிட்டீர்களா? சத்தமாகச் சொல்லுங்கள். இன்று நாட்டு மக்கள் தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் vs NDA

“தமிழ்நாட்டுக்கும் NDA-வுக்கும் போட்டி” என்கிறார். ஐயா, நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலையே மறந்துவிட்டீர்கள். அவருக்குப் பதற்றம் அதிகமாகி உளற ஆரம்பித்துவிட்டார். தோல்வி பயத்தில் ஏதேதோ பேசுகிறார்.

விஜய் பேசியதை அப்படியே பேசிய எடப்பாடி

ஸ்டாலின் அவர்களே! தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது; இது டெல்லியில் நடக்கும் தேர்தல் அல்ல. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல. இங்கே அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவும், திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் நடக்கின்ற தேர்தல். இது கூடத் தெரியாமல் பேசும் ஒரு முதலமைச்சரை வைத்துக்கொண்டு நாடு தாங்குமா? எங்களை எதிர்க்க உங்களுக்குத் துணிவோ, திராணியோ, தெம்போ இல்லை. நான் பலமுறை சவால் விட்டுள்ளேன். ஸ்டாலின் அவர்களே! நீங்களே ஒரு மேடை போடுங்கள். அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டு காலம் நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடத்தில் சொல்கிறோம். உங்கள் தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தீர்கள், அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று நீங்கள் சொல்லுங்கள்.

அதிமுக வலிமையான கட்சி, சிறப்பான ஆட்சி செய்த கட்சி, மக்களுக்குப் பொற்கால ஆட்சி கொடுத்த கட்சி. ஆனால் திமுக ஊழல் நிறைந்த ஆட்சியாகப் பார்க்கப்படுகிறது. எல்லாத் துறையிலும் ஊழல். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் (Commission, Collection, Corruption) என எல்லாத் துறையிலும் தடையின்றி நடக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? மக்கள் ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது அதிமுகவால் மட்டும்தான் முடியும்.

அதிமுக தனிப்பெரும்பான்மை ஆட்சி

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் வெற்றி பெற்று, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் “திமுக கூட்டணி வலிமையான கூட்டணி” என்கிறார். ஸ்டாலின் அவர்களே! நீங்கள் கூட்டணியை நம்பித் தேர்தலைச் சந்திக்கிறீர்கள், நாங்கள் மக்களை நம்பித் தேர்தலைச் சந்திக்கிறோம். மக்கள்தான் எஜமானர்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மக்களிடத்தில் இருக்கிறது. அந்த மக்களை நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி, உறுதி, உறுதி.

யார் யாருக்கு அடிமை?

எப்போதும் என்னைக் “டெல்லி அடிமை”, “பாஜக அடிமை” என்கிறார். நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. அதிமுக உழைப்பை நம்பி இருக்கிற கட்சி. மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து ஆதரவு பெற்ற இயக்கம். உங்கள் கட்சி அப்படி அல்ல. முன்பு திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்தபோது, அறிவாலயத்தின் முதல் மாடியில் வருமான வரித்துறை சோதனை நடந்தது, தரைதளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள். நீங்கள்தான் காங்கிரசுக்கு அடிமை.

எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் “திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்ற ஒரே நோக்கம் கொண்டவை. அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றாக நிற்கிறோம். அதிமுக தலைமையில்தான் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. “எங்கள் கூட்டணி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று மத்திய உள்துறை அமைச்சரே சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் திறந்த மனதோடு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம்.

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எங்களது கூட்டணித் தலைவர்கள் மேடையில் தங்களது கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவித்தார்கள்.

திமுகவில் அப்படி இருக்கிறதா?

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. காங்கிரஸின் மாநிலப் பொறுப்பாளர் “ஆட்சியில் பங்கு வேண்டும்” எனத் தனது அடிப்படை உரிமையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார். கடந்த பத்து நாட்களாக ஊடகங்களில் வருவது இதுதான் – காங்கிரசுக்கும் திமுகவுக்கும் வார்த்தைப் போர் தொடங்கிவிட்டது, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி இருக்குமா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே, 2 மாதத்திற்கு முன்பு “எடப்பாடி பழனிச்சாமி கடையை விரித்து வைத்துக் கூட்டணிக்காகக் கூவி அழைக்கிறார், யாரும் இல்லை” என்று சொன்னீர்கள். இப்போது பாருங்கள், எங்களுடையது வலிமையான கூட்டணி. நிச்சயமாக அதிமுக ஆட்சி அமைக்கும்.

விலைவாசி உயர்வு ஒப்பீடு

இன்று விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டது.

பச்சரிசி அதிமுக ஆட்சியில் ரூ. 40, திமுக ஆட்சியில் ரூ. 77.

பொன்னி அரிசி அதிமுக ஆட்சியில் ரூ. 42, திமுக ஆட்சியில் ரூ. 75.

கடலை எண்ணெய் அதிமுக ஆட்சியில் ரூ. 110, திமுக ஆட்சியில் ரூ. 200.

துவரம் பருப்பு அதிமுக ஆட்சியில் ரூ. 74, திமுக ஆட்சியில் ரூ. 120.

இவ்வாறு விலைவாசி உயர்ந்தபோது அதிமுக ஆட்சியில் ‘விலைக்கட்டுப்பாட்டு நிதியம்’ மூலம் நூறு கோடி ஒதுக்கி, வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறை மூலம் விலையைக் கட்டுப்படுத்தினோம்.

ஆனால் திமுக அரசு 24 மணி நேரமும் கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share