மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் தோழர் நல்லகண்ணு (வயது 101) உடல் இன்று மாலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களின் கல்விக்காக தானமாக முழு அரசு மரியாதையுடன் வழங்கப்படுகிறது.
நூற்றாண்டு வாழ்வு கண்ட போராளி தோழர் நல்லகண்ணு முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் பிப்ரவரி 25-ந் தேதி பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார். நல்லகண்ணுவின் உடல் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவின் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தவாக தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின், தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் நேற்று இரவு நல்லகண்ணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காண்டி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை, இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்” என கூறியிருந்தார்.
நல்லகண்ணுவின் உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் முறைப்படி தோழர் நல்லகண்ணுவின் உடல் தானமாக வழங்கப்படும்.
