கூட்டணி கட்சிகளை முதல்வர் திருப்திபடுத்திவிடுவார் : உதயநிதி பேட்டி!

Published On:

| By Kavi

கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்துபவர் முதல்வர் ஸ்டாலின் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் CNN NEWS 18 சார்பில் நடைபெற்ற “TOWN HALL CHENNAI” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை முதல்வர் ஸ்டாலின் நெறியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

ADVERTISEMENT

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக அரசியல் திமுக – அதிமுக இடையேதான் இருந்துள்ளது. வரும் தேர்தலும் அப்படியே இருக்குமா?

அதைத் தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், மக்கள் திமுக  பக்கம் நிற்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். புதிதாக வருபவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள், அவர்களுக்கான இடம் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், தமிழக மக்கள் மிகுந்த தெளிவானவர்கள், அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.

ADVERTISEMENT

200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களிலும் வென்று 100 சதவீத வெற்றியைப் பெற்றோம். அந்த கணக்கீட்டின்படி பார்த்தாலே 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ என்பது எங்கள் இலக்கு. இன்னொன்று,  இதுவரை எந்த முதலமைச்சரும் மக்களை இவ்வளவு தூரம் சந்தித்தது இல்லை. எங்கள் முதல்வர் எப்போதும் மக்களோடே இருக்கிறார். 

ADVERTISEMENT

தமிழ்நாடுக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி வருகிறார்கள். பாஜகவுக்கு செய்தி என்ன?

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அடிக்கடி தமிழகம் வரட்டும். அவர்கள் வர வர மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படும். அவர்கள் வருகிறார்களே தவிர, தமிழகத்திற்கான நிதி எதையும் தருவதில்லை. கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் என எதற்கும் நிதி தருவதில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் ‘தேர்தல் நேரத்து லஞ்சம்’ என விமர்சிக்கிறார்களே?

இது மக்களுக்குத் தந்த சர்ப்ரைஸ். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற திட்டத்தை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தார்கள். அதனால்தான், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே மூன்று மாதத் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார். காலையில் 7 மணிக்கு பணம் கிரெடிட் ஆனால், வங்கிகள் மூலம் எடுத்துவிடுவார்களோ என்று நினைத்து 9 மணிக்கெல்லாம் பெண்கள் எடுத்துவிட்டார்கள். அந்தளவு பாஜக மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 

கூட்டணிக் கட்சிகளுடனான உறவு எப்படி இருக்கிறது?

நீங்கள் சிண்டு முடிவதற்கான வேலையை பார்ப்பீர்கள் தானே…. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. திமுக நிர்வாகிகளைக் கூட எங்கள் தலைவர் சில சமயம் விட்டுக்கொடுப்பார், ஆனால் கூட்டணிக் கட்சிகளை மிகவும் அரவணைத்துச் செல்வார்.  அவர்களை திருப்திபடுத்திவிடுவார். எல்லாருக்கும் உரிய மரியாதையை வழங்குவார். அதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share