ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினின் ‘கேப்விடாத’ புது வியூகம்… திகைத்து போன திமுக – சீரியசாகும் களம்!

Published On:

| By Minnambalam Desk

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினின் ‘கேப்விடாத’ புது வியூகம்… திகைத்து போன திமுக- சீரியசாகும் களம்!

வைஃபை ஆன் செய்ததும் இயற்கை மழைக்கு இணையாக அரசியல் களத்தில் ‘இடி மின்னல் மழை’ என இடைவிடாமல் வெளுக்கிறதே என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ADVERTISEMENT

அரசியல் களத்தில் அப்படி என்னய்யா இடி- மின்னல்- மழை?

சிஎம் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 22) எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கார். அதில்,”
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க – கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!” என பதிவிட்டிருப்பதுடன் பிரம்மாண்ட கூட்டங்களின் படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்.. பார்த்தீரா?

ADVERTISEMENT

ஆமாம்யா.. கூட்டம் நடத்தினாங்க.. பதிவு போட்டிருக்கார்.. இதில் என்ன விஷேசம்?

“கரூரில் முப்பெரும் விழா செப்டம்பர் 17-ந் தேதி நடந்துச்சு.. அதற்கு அடுத்த நாளே கேப்பே விடாமல், தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அத்தனை கூட்டத்தையும் பிரம்மாண்டமாக நடத்தியும் முடிச்சு காட்டிட்டாரே நம்ம தலைவர்” என சிலிர்க்கின்றனர் திமுகவினர்.

ADVERTISEMENT

இதுபற்றி நாம் திமுகவின் மூத்த அமைச்சர்களிடம் பேசிய போது, “சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் அரசியலில் ஒரு சின்ன இடைவெளியை கூட எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் தந்துவிடக் கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமாக இருக்கிறவர்.. வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிஸி ஷெட்யூல்தான்.. ஆனாலும் பீகாருக்கு போய் ராகுல் காந்தி பேரணியில கலந்துகிட்டாரு இல்லையா? அந்த மாதிரி ஒரு நூல் கூட எதிர்க்கட்கள்.. யாராக் இருந்தாலும் அவங்களுக்கு இடம் தரக்கூடாதுன்னு உறுதியாக இருக்காரு.. நிர்வாக ரீதியாக சில விஷயங்களை சொல்றது வேற.. விமர்சிக்கிறாங்க என்பதெல்லாம் வேற.. தேர்தல் நெருங்க நெருங்க ‘தலைவரோட சாட்டை’ இன்னும் ரொம்ப வேகமாக சுழலும்.. ஜெயிக்கிற வரைக்கும் விடமட்டாரு பாருங்க” என வியந்தபடியும் வியர்த்தபடியும் பகிர்ந்தனர்.

திமுக கடந்த 2 நாட்களாக நடத்திய கூட்டங்களில் பேசிய பெரும்பாலான திமுக அமைச்சர்கள், “விஜய் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தனர்; விஜய்யின் ‘சனிக்கிழமை’ பிரசார கூட்டங்களை தங்களது பொதுக் கூட்டங்களுடன் ஒப்பிட்டு” பேசினர்.. அதன் தொடர்ச்சியாகவே சிஎம் ஸ்டாலினும் இந்த படங்களை பகிர்ந்துள்ளார்.

திமுகவின் சீனியர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, “கலைஞர் காலத்திலும் சரி தற்போது ஸ்டாலின் காலத்திலும் திமுக எந்த ஒரு புதிய அரசியல் நிகழ்வையும் லேசாக எடுத்துக்காது.. மேலோட்டமாக பார்க்கிற மாதிரி தெரியும்.. ஆனால் ரொம்ப கவனமா, உஷாரா வாட்ச் பண்ணும்..

விஜய் வெளியே வரமாட்டார்; வெளியே வந்து பேசினால் அவருக்கான செல்வாக்கு சரிந்து கொண்டே போகும் என பலரும் சொல்லிகிட்டே இருந்தாங்க..

ஆனால் “விக்கிரவாண்டி சாலை, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம், நாகை- திருவாரூர் பிரசாரம் என ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்க்கான கூட்டம் அதிகமாகுது..செல்வாக்கு கூடுதுன்னு” ஒரு ரிப்போர்ட் அண்மையில் வந்தது.

அதுல, “தற்போதைக்கு 12% முதல் 15% வரை வாக்கு பெறக் கூடிய செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது” எனவும் சொல்லப்பட்டிருந்தது.

இந்த ரிப்போர்ட்டை சிஎம் அசால்ட்டாக எடுத்துக்கலைன்னு சொல்றமாதிரிதான் இப்ப பொதுக் கூட்டம், அமைச்சர்களின் அதிரடி கவுண்ட்டர் அட்டாக் எல்லாமே இருக்கு.. இதுதான் சிஎம்மோட வியூகம்” என்கின்றனர்.

அத்துடன், அடுத்ததாக செப்டம்பர் 27-ந் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல்லிலும் மாலை 3 மணிக்கு கரூரிலும் விஜய் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருக்கு.. கரூரில் பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்டது திமுகவின் முப்பெரும் விழா. அந்த முப்பெரும் விழாவுக்கு பல லட்சம் பேர் திரண்டிருந்தாங்க.. அதனால் கரூரில் விஜய் பிரசாரம் செய்தால் வரப் போகும் கூட்டம் எப்படி இருக்கும் என திமுக உன்னிப்பாக கவனிக்குது..

ஓஹோ.. அதுக்கு அப்புறம் திமுகவோட ‘கச்சேரி’ இருக்கப் போகுதோ?

ஆச்சரியத்துக்கு இடமில்லையே.. திமுகதான் என்று மட்டுமல்ல.. தமிழக அரசின் Fact Check டீமும் கூட இப்ப களத்தில் இறங்கி விஜய்க்கு பதில் தருகிறதுன்னா பார்த்துக்குங்க..

நாகையில் விஜய் பேசும் போது, ரயில் பெட்டி தொழிற்சாலை- அலையாத்தி காடுகள் பற்றி சொல்லி இருந்தாரு.. இது இரண்டுமே தவறுன்னு தமிழக அரசின் Fact Check டீம் சூடா பதில் கொடுத்துருக்கு.. எந்த ஒரு சூழ்நிலையும் அரசியல் எதிரிகளுக்கு சாதகமாகவே கூடாதுன்னுதான் இந்த பதிலடி எல்லாம்..

சரி.. விஜய் தரப்பில் ரியாக்சன் என்ன?

Fact Check டீம் மாதிரி அமைச்சர்களும் அடுத்தடுத்து விஜய்க்கு பதில் சொல்லிகிட்டு வர்றதால, ‘நான் பேசுனதல என்ன தப்பா இருக்கு?’ என தன்னோட Content டீம் கிட்ட விஜய் கேட்டிருக்காரு.. அந்த தப்பையெல்லாம் Correct செய்யுங்க எனவும் சொல்லி இருக்கிறாரு..

இதனால இனி விஜய் பேசுற பேச்சுகள், முன்வைக்கிற புள்ளி விவரங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை சரியாக செக் செய்யனும்னும் அந்த டீம் விழிப்பா இருக்காம்.. அதாவது விஜய் பேச்சு ரீச் ஆகனுமே தவிர சர்ச்சையாகி பேக் பயராகிடக் கூடாதுன்னு உஷாரா இருக்கனும்னு சொல்லப்பட்டுள்ளதாம்.

“என்னதான் இப்படி விஜய் சீரியசாக பேசிகிட்டே இருந்தாலும் கூட்டம் வந்துகிட்டே இருந்தாலும் இந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஓட்டாக மாறுமா? நிச்சயம் மாறாது.. அதனால விஜய் தரப்பை ரொம்பவே சீரியசாகவும் எடுத்துக்க வேண்டியது இல்லையே” என்கிற திமுக மூத்த அமைச்சர்கள் சிலரது குரலும் அறிவாலயத்தில் கேட்க முடிகிறதே என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share