ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையின் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 3) வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரையில் 8 மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்கையை மேற்கொள்ளவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளனர்.
அந்தவகையில், இன்றைய தினம் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த வாக்குச்சாவடிகளுக்கு வீடு வீடாக சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் நீங்கள் பெற்ற பயன் என்ன? ஆட்சி எப்படி இருக்கிறது? உங்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம், “எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
மகளிர் தங்கள் உரிமை தொகையை பெற்றிடவும், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்ளை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?
மாணவர்களுக்கான கல்வி நிதி மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவு தேர்வு போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா?
டெல்லியின் அதிகாரத்திற்கு அடி பணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் ஸ்டாலின் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் பொதுமக்கள் ஆம் என்று பதிலளித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். stalin starts oraniyil tamil nadu campaign