வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 29) தென்காசியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களைக் காப்பது தான் நம்முடைய கடமை என்று செயல்பட்டு வரக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால், என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கின்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே, பீகாரில், இதனால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். பாஜக தோல்வி உறுதியானால், வாக்காளர்களையே நீக்கத் துணிந்தார்கள். அதே பார்முலாவை தமிழ்நாட்டிலும் இப்போது முயன்று பார்க்கிறார்கள்.
தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து நாம் எல்லோரும், அனைத்து வகையிலும், இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கேரளாவும் நம்முடன் இதில் இணைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக, நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க, வருகின்ற நவம்பர் 2-ஆம் தேதி அன்று நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறேன். அழைப்பு விடுத்திருக்கிறேன். அனைவருக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.
இந்த மேடையிலிருந்து மீண்டும் உறுதியாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம்! தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்.
மக்களாட்சியைக் காப்பாற்றுவதற்கான இந்த முன்னெடுப்பில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கெடுக்க வேண்டும் என்று நான் இந்த மேடையிலிருந்து அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறேன். இயற்கைப் பேரிடராக இருந்தாலும், செயற்கையான அரசியல் சதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து மக்களைக் காப்பதுதான் என்றைக்குமே நம்முடைய பணி” என்று தெரிவித்தார்.
