வரும் நவம்பர் 2ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விஜய்யின் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரை போல தமிழ்நாடு உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தசூழலில் கடந்த 27ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் இக்கூட்டணி வெளியிட்ட கூட்டறிக்கையில், ’தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் SIR-ஐ உன்னிப்பாகக் கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள “ஓட்டல் அகார்டில்” நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

இந்தசூழலில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று திமுக சார்பில் அழைப்பு விடுத்தார் தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவரான பூச்சி முருகன்.
இதுபோன்று மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.
கரூரில் நடந்த உயிரிழப்பை தொடர்ந்து மீண்டும் இன்று முதல் தனது செயல்பாட்டை தவெக தொடங்கியிருக்கிறது. முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று தவெக நிர்வாகிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
