திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை எனில் திமுக நிர்வாகிகளின் பதவிகள் பறிபோகும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது.
திமுகவின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் ‘உடன்பிறப்பே வா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் நேரடியாக சந்தித்து கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மா.செ.க்கள் தூக்கியடிக்கப்பட்டு, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட திமுகவும் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி மாற்றங்களை சந்தித்தது. நெல்லை கிழக்கு மாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம் என திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இருந்து வந்தனர்.
ஸ்டாலின் நடத்திய உடன்பிறப்பே வா நிகழ்ச்சிக்குப் பின்னர், ஆவுடையப்பனின் நெல்லை கிழக்கு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என புதியதாக பிரிக்கப்பட்டு நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன்; நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமிக்கப்பட்டனர். நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக வஹாப் எம்.எல்.ஏ. இருந்து வருகிறார்.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து திமுகவின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் One to One ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் நெல்லை மேற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இவர் சபரீசனின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சுப்பிரமணியனிடம், நெல்லை நிலவரம் பற்றி ஸ்டாலின் கேட்டார். அப்போது, “தொகுதியில் நாம வலிமையாக இருக்கிறோம்.. கண்டிப்பாக ஜெயிப்போம் ” என சுப்பிரமணி கூறினார்.
மேலும், நெல்லையில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.. தேவேந்திர குல வேளாளர்கள் 67,000 வாக்குகளும் நமக்கு ஆதரவாக இருக்கிறது என சொன்னார் சுப்பிரமணியன்.
அப்போது, பிள்ளைமார் சமூகம் குறைவாகத்தானே இருக்கிறாங்க.. தேவேந்திரகுல வேளாளர் ஜாதியில 55,000 வாக்காளர்கள்தானே இருக்கிறாங்க என புள்ளி விவரத்தை அடுக்கி இருக்கிறார் ஸ்டாலின்.
ஒரு கணம் திகைத்துப் போன சுப்பிரமணியன், “இல்லைங்க தலைவரே.. தேவேந்திர குல வேளாளர்களுடன் தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்தால் 65,000 முதல் 67,000 வாக்காளர்கள் வரை இருப்பாங்க” என வியர்த்தபடியே பதில் சொன்னார்.
இதன் பின்னர், “பொதுவாக உங்க மேல எந்த புகாரும் இல்லைதான்.. ஆனால் மாவட்ட செயலாளர் வஹாப் எம்.எல்.ஏ.வுடன் ஏன் இணக்கமா இல்லாம இருக்கீங்க?” என ஸ்டாலின் கேட்ட கேள்வியால் ஒரு நிமிடம் ஆடிப் போனார் சுப்பிரமணியன். இதற்கு, “வஹாப் எம்.எல்.ஏ.தான் எங்களை எல்லாம் மதிக்கிறதே இல்லை” என சுப்பிரமணியன் சொல்ல உடனே, வஹாப்பை உள்ளே வரவழைத்து நேருக்கு நேராக விசாரணை நடத்தினார் ஸ்டாலின்.
ஸ்டாலினிடம் வஹாப் எம்.எல்.ஏ., “நம்ம கட்சிக்காரங்களே யூடியூப்பில் சில பேரை எனக்கு எதிராக பேச வெச்சுகிட்டு இருக்காங்க” என புகார் வாசித்தார். அப்போது ஸ்டாலின் குறுக்கிட்டு, “என்னை பற்றியும் யூடியூப்பில் விமர்சிக்கிறாங்க.. அதை எல்லாம் நாமதான் கண்டுக்காம போகனும்” என அட்வைஸ் செய்தபடியே, “உங்க மேல இத்தனை குற்றச்சாட்டு இருக்கிறதே” என்றபடியே ஒரு ஃபைலை கொடுத்துள்ளார்.
அந்த ஃபைலில், வஹாப் எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்புக்கு ஆதரவு புகார் தொடங்கி ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபற்றி ஸ்டாலினுக்கு வஹாப் எம்.எல்.ஏ. ரொம்பவே பதற்றத்துடன் விளக்கம் கொடுத்தாரு..
அந்த சூழலில்தான், “இந்த தேர்தலில் நாம நிறுத்துகிற வேட்பாளர் ஜெயிக்கனும்.. அப்படி ஜெயிக்கலைன்னா கட்சி பதவி பறிபோகும்” என எச்சரித்தார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
மேலும், “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பதாக புகார் சொல்றாங்களே?” என அடுத்த கேள்வியை ஸ்டாலின் கேட்டார். இதற்கு, “அதெல்லாம் இல்லைங்க தலைவரே… நயினார் எல்லோரிடமும் சகஜமாக பேசுவாரு.. அதை வைச்சுதான் அப்படி சொல்றாங்க” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அத்துடன், நயினார் நாகேந்திரனுக்கு எதிராக முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெல்ல முடியும் எனவும் ஸ்டாலினிடம் வஹாப் சொல்லி இருக்கிறார். இப்படி அழுத்தமாக சொன்னதன் மூலம் எம்.எல்.ஏ. சீட் கனவில் இருக்கும் நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கு ‘வேட்டு’ வைத்துவிட்டார் வஹாப் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதேபோல ஒன்றிய செயலாளர் அன்பழகனிடமும் அவர் மீதான புகார் ரிப்போர்ட்டை கொடுத்து, “கட்சி செலவுக்கு நிதி கூட தருவதில்லையாமே?” என ஸ்டாலின் கேட்ட கேள்வியால் கிடுகிடுத்து போனாராம். நெல்லையில் மட்டுமல்ல ‘தொல்லை’ தருகிற அத்தனை மாவட்டங்களுக்கும் ‘அறிவாலயத்தில்’ ‘தரமான சம்பவம்’ காத்திருக்கிறது என்கின்றன திமுக வட்டாரங்கள்.
