தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 12ஆம் தேதி கோவை வருகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 22,23 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வரின் உடல் நலக்குறைவு காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
தற்போது உடல் நலம் சரியானதைத் தொடர்ந்து முதல்வர் மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் ஆகஸ்ட் 11ந்தேதி கோவை வருகிறார். விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் முதல்வர் கார் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்குச் செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இதைதொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பொறியாளர் அலுவலகத்தில் பரம்பிக்குளம், ஆழியார் பாசன திட்டம் நிறைவேறக் காரணமாக இருந்த காமராஜர், பொள்ளாச்சி மகாலிங்கம், சி.சுப்பிரமணியம் ஆகிய தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
மீண்டும் கார் மூலம் கோவை வரும் ஸ்டாலின் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் 2041 குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
