ADVERTISEMENT

இசைஞானி இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin insistence giving Bharat Ratna to Ilayaraja

இசைஞானி இளையராஜாவிற்கு இன்று (செப்டம்பர் 13) தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உலகெங்கும் உள்ள இசை ரசிகர்கள் சார்பில் வலியுறுத்தி உள்ளார்.

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ” ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.. நேற்று இல்லை.. நாளை இல்லை.. எப்பவும் நீ ராஜா.. என்ற இளையராஜாவின் பாடல் மூலம் தன் பேச்சை தொடங்கினார். இசை எனும் தேனை உலகத்திற்கு தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட புகழ நாம் எல்லோரும் கூடியிருக்கிறோம். நம்முடைய இசைஞானி கலைத் தாய்க்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.. தமிழ் தாய்க்கும் சொந்தமானவர்..

ADVERTISEMENT

அதனால் தான் தமிழக அரசு சார்பில் அவரை கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். பாராட்டு என்பது ராஜாவிற்கு புதுசா.. கிடையாது.. இசைஞானியை பாராட்டுவதில் நாம் தான் பெருமை அடைகிறோம். இசைஞானி இளையராஜா தனது திரையுலக பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் நடைபெறுகிறது. நம்முடைய இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜாவிற்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பில் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு திறமையும்,உழைப்பும் இருந்தால் எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என எல்லா மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த மனிதர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி தங்களுடைய இன்ப, துன்பங்களை பொருத்திப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது.

ADVERTISEMENT
சங்கத் தமிழுக்கு இசை அமைக்க வேண்டும்

இளையராஜாவின் இசை தாயாக தாலாட்டுகிறது.. காதலின் உணர்வுகளை போற்றுகிறது.. வெற்றி பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது.. வலிகளை ஆற்றுகிறது உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இவர் இளையராஜா மட்டுமல்ல.. இணையற்ற ராஜா.. ஒரு ராஜா இருந்தால் அவருக்கென்று நாடு இருக்கும் மக்கள் இருப்பார்கள்.. எல்லைகள் இருக்கும்.. ஆனால் இந்த ராஜா மொழிகளைக் கடந்தவர்.. நாடுகளைக் கடந்தவர்.. எல்லைகளைக் கடந்தவர்.. எல்லா மக்களுக்குமானவர்.. திரையிசையைக் கடந்த இளையராஜா அவர்களின் இசை அவரது திறனை, வீச்சை, ஆற்றலை, ஆழத்தை, உயரத்தை எடுத்துச் சொல்லும். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும், நற்றிணையும், புறநானூறும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், பரிபாடலும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும் என ஒருவர் இசைஞானியை பற்றி சோசியல் மீடியாவில் எழுதி இருந்தார்.

நானும் இதையே தான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட வேண்டும். எப்போதும் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். முதலமைச்சராக இருக்கும் நான் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் தமிழர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

ADVERTISEMENT

இசை ஆளுமையும், தமிழ் புலமையும் கொண்ட நீங்கள் இந்த கடமையை செய்ய வேண்டும். இதனால் ஏற்கனவே தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் உங்கள் இசை மூலம், தமிழ் சுவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்படும்.‌ ஏனென்றால் ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை.. அந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

இசையால் நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜா அவர்களுக்கு எத்தனையோ புகழ் மகுடங்கள் பாராட்டு மாலைகள் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற பட்டங்கள் இருந்தாலும் அவருக்கென அவருடைய ஆற்றலுக்கான பொருந்தி அவரோடு என்றைக்கும் பயணிக்கும் பட்டம் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய இசைஞானி பட்டம்.. அது பட்டமா.. அது பெயராகவே நிலைத்து விட்டது.

பிறந்த நாளை மாற்றிய இசைஞானி

இசைஞானியின் உயரங்களை பார்த்து பெருமைப்பட்ட கலைஞருக்கு, இசைஞானி வழங்கிய மரியாதை யாரும், யாருக்கும் தராத மரியாதை. வரலாற்றில் எத்தனையோ மாமனிதர்கள் ஒரே பிறந்த நாளை கொண்டாட கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் யாரும் மற்றவர்களுக்காக தன் பிறந்த நாளை மாற்றிக் கொண்டது கிடையாது. ஆனால் தலைவர் கலைஞருக்காக இசைஞானி தன்னுடைய பிறந்தநாளை ஜூன் இரண்டாம் நாள் நாளாக மாற்றிக் கொண்டார். அந்த வகையில் உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்திருக்கிறார்.

எனது மகள் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார். அந்த நட்போடு சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போவதாக செய்தி வந்த உடனேயே முதல் ஆளாக அவரது வீட்டிற்குச் சென்று என்னுடைய பாராட்டுகளை தெரிவித்தேன். அதேபோல் சிம்பொனி சாதனையை நிறைவேற்றிய வெற்றி கழிப்போடு அவர் என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்தார்.இந்த அன்பிற்கு நான் என்றென்றும் கட்டுப்பட்டவன்..கடமைப்பட்டவன்.

இசைஞானி இளையராஜா விருது

இசைத்துறையில் ஆர்வத்தோடு சிறந்த இசை படைக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

பாரதரத்னா கோரிக்கை

நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் அது சாதாரணம்தான். அப்படிப்பட்ட ராஜாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை இந்த மேடையில் நின்று தமிழர்கள் சார்பில் உலகெங்கும் இருக்கும் ராஜாவின் ரசிகர்கள் சார்பில் இந்த விழாவில் தெரிவிக்க விரும்புகிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share