அதிமுக முகமூடியைப் போட்டு வந்தால் எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாம போயிடுமா என முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று (மார்ச் 9) நடந்த திமுகவின் 12 ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ” சமீப காலமாக கவனித்தீர்களா, மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம், இன்ஸ்டால்மென்ட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிலும் என்ன அறிவிக்கிறார்கள்? திராவிட மாடல் அரசு சார்பில், நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்களையே, Top up செய்து, காப்பி அடித்து அறிவிக்கிறார்கள். அவ்வளவுதான்! ஏனென்றால், அவர்களுக்கும் வேறு வழியில்லை. நம்முடைய ஆட்சியில், நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை இனி யாராலும் மாற்ற முடியாது, எவராலும் நிறுத்த முடியாது.
யோசித்துப் பாருங்கள்., நாம் வழங்கிய மகளிர் உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியுமா? முடியாது. அப்படி அவர்கள் நினைத்தாலே, அவர்களின் வீட்டுப் பெண்களே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் இப்போது அதிகப்படுத்தி அறிவிக்கிறார்கள். அடுத்து, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில், யாராவது கை வைக்க முடியுமா? முடியாது. அந்தக் குழந்தைகளை பட்டினி போட்டால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களைச் சும்மா விடமாட்டார்கள். அதேபோல, பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தை அவர்களால் மாற்ற முடியுமா? முடியாது. இன்னும் இருக்கிறது. உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் – இதையெல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ எந்தக் கட்சியாவது யோசிக்க முடியுமா? முடியாது. அதுமட்டுமல்ல, முதியவர்களுக்கு வீடு தேடி ரேசன் தரும் தாயுமானவர் திட்டம், வீடு தேடி மருத்துவம் தரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – இதையெல்லாம் தொடரமாட்டோம் என்று எந்தக் கட்சியாவது வாய் திறக்க முடியுமா? இப்படி எவராலும் மாற்ற முடியாத திட்டங்கள்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திட்டங்கள்! அவர்களுக்குத் தேர்தல் அறிக்கைக்குக் கன்டென்ட் கொடுப்பதே இந்த ஸ்டாலினின் திட்டங்கள்தான்!
‘No Entry’-தான்
அதனால்தான் உறுதியோடு சொல்கிறேன்… இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரைக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுவான்! நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்! ஆனால், அ.தி.மு.க. கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும் – அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். N.D.A. கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்குப் பெயர் வைக்கக் கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க. இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த N.D.A. கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது? கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை! மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்களையும் தரவில்லை! ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை. நாம் கேட்பது… மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அடிப்படையாக மாநிலத்துக்குக் கேட்டதையாவது அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். எதுவுமே இல்லையா?
பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாகக் குடைச்சல்! மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு! இந்தித் திணிப்பு! மிரட்டிப் பார்க்க ரெய்டுகள்! இப்படிப்பட்ட ஆட்சிதான், பிரதமர் மோடி சொல்லும் N.D.A. ஆட்சி! தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்! தமிழ்நாடு மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் வருகிறதே என்று கூட தெரியாமல், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனது வரவில்லை. நான் கேட்கிறேன்… இப்படி திட்டமிட்டுத் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற N.D.A. கூட்டணிக்கு, எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும்! இங்கே உங்களுக்கு எப்போதும் ’நோ எண்ட்ரி’ தான்! உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, ‘No Entry’-தான் சொல்லும்!
சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs NDA இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் என்று சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs NDA என்று தி.மு.க. சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள். தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்… தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்… அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்!
அதிமுகவை விழுங்கும் பாஜக
அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள்.
அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட பீகாரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கிறதே! பீகார் மாநிலத்தில் இதுவரை பா.ஜ.க. முதலமைச்சர் இருந்ததே கிடையாது. நிதிஷ்குமார் அவர்களை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, இப்போது காரியம் ஆனதும் அவரை ஓரங்கட்டிவிட்டு, பா.ஜ.க. முதலமைச்சரை உள்ளே கொண்டு வரப் போகிறார்கள்.
நாங்கள் பார்க்காத படையெடுப்பா?
இதையேதான் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள். நான் அடித்துச் சொல்வேன்! சேலஞ்ச் செய்து சொல்வேன்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு Out Of Control-தான்! நாங்கள் பார்க்காத படையெடுப்பா? தி.மு.க. பார்க்காத மிரட்டலா? நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டுமானாலும், காவி அடித்திருக்கலாம்! ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது! இங்கே எப்போதுமே நாங்கள்தான்! எங்கள் மண்ணில், நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்!” என தெரிவித்தார்.
