கூகுள் சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா வரை, உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களை இந்தியர்கள்தான் ஆள்கிறார்கள். “நம்ம ஊரு பசங்க கெத்து” என்று நாம் பெருமைப்பட்டாலும், “இது எப்படிச் சாத்தியம்?” என்ற கேள்விக்கான விடை இன்னும் புதிர் தான்.
இதற்குப் பலரும் “இந்தியாவில் இருக்கும் கடுமையான போட்டிதான் காரணம் (Perform or Perish),” என்று சொல்லி வந்தனர். ஆனால், ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேற்று (பிப்ரவரி 5, 2026) எக்ஸ் (X) தளத்தில் முன்வைத்த ஒரு புதிய காரணம், இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தைத் தீயாகப் பற்ற வைத்துள்ளது.
போட்டி காரணமல்ல; ‘விசுவாசம்’ தான் காரணம்!
“இந்தியர்கள் திறமையானவர்கள் என்பதாலோ அல்லது இங்குள்ள நெருக்கடியால் உருவானவர்கள் என்பதாலோ அவர்கள் சிஇஓ ஆகவில்லை,” என்று கூறும் ஸ்ரீதர் வேம்பு, அதற்கு “நிறுவன விசுவாசம்” (Organizational Loyalty) என்ற புதிய காரணத்தைச் சொல்கிறார்.
- அவர் சொல்வது என்ன? “ஒரு அமெரிக்க நிறுவனத்தில் 2000-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தவர்களை எடுத்துக்கொண்டால், 20 வருடம் கழித்து இன்றும் அதே நிறுவனத்தில் நிலைத்து நிற்பவர்கள் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள். அமெரிக்கர்கள் அடிக்கடி வேலை மாறுவார்கள். ஆனால் இந்தியர்கள், அந்த நிறுவனத்தைத் தங்கள் ‘குடும்பம்’ போல நினைத்து அங்கேயே தங்கிவிடுகிறார்கள். யார் நீண்ட காலம் இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பதவி உயர்வு கிடைக்கிறது,” என்கிறார் வேம்பு.
விவாதம் எங்கே வெடித்தது?
ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்தை பலர் வரவேற்றாலும், தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.
- விசுவாசமா? அல்லது விசா பிரச்சனையா? “சார், இந்தியர்கள் ஒரே கம்பெனியில் இருப்பது விசுவாசத்தால் அல்ல; எச்-1பி (H1-B) விசா பிரச்சனையால்! வேலை மாறினால் விசா போய்விடுமோ என்ற பயத்தில்தான் (Risk Aversion) அவர்கள் அங்கேயே குப்பை கொட்டுகிறார்கள். இதை ‘லாயல்டி’ என்று ரொமான்டிசைஸ் செய்யாதீர்கள்,” என்று பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
- குடும்பம் சென்டிமென்ட்: “கம்பெனியை குடும்பமாக நினைப்பது இந்தியக் கலாச்சாரம்,” என்று வேம்பு சொல்வதை, கார்ப்பரேட் உலகில் பலர் ஏற்க மறுக்கிறார்கள். “கம்பெனி எப்போதுமே குடும்பம் ஆகாது; அது ஒரு பிசினஸ் மட்டுமே,” என்பது ஜென்-ஜி (Gen Z) இளைஞர்களின் வாதம்.
“திரும்பி வாங்க பாஸ்!”
ஏற்கனவே, “வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களே… தாய்நாடு திரும்ப வாருங்கள் (Bharat Mata wants you),” என்று ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியர்களின் வெற்றியைக் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது, “Brain Drain” (மூளை வெளியேற்றம்) விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
முடிவு:
காரணம் எதுவாக இருந்தாலும் – அது விசுவாசமோ அல்லது விசா பயமோ – முடிவு ஒன்றுதான்: சிலிக்கான் வேலி (Silicon Valley) சாவி இப்போதைக்கு இந்தியர்களின் இடுப்பில்தான் இருக்கிறது!
