உதய் பாடகலிங்கம்
காதில் புகை வரவழைக்கும்!

வரலாற்று உண்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும் தகவல்களும் செய்திகளும் மக்களை எளிதாக ஈர்க்கும். திரைப்படங்களில் அவை இடம்பெறும்போது பெரியளவிலான கவனிப்பைப் பெறும்.
இந்தியா விடுதலை பெற்றபிறகும் சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடிருந்தாரா என்ற கேள்விக்குப் பலவாறாகச் சொல்லப்படும் பதில்களும் அந்த வகையறாவில் சேரும். அப்போதைய இந்திய அரசுக்கும் அந்த உண்மைகள் தெரியும் என்பது அவற்றிலொன்று. அத்தகைய நேதாஜி தொடர்பான ஒரு ரகசியக் கோப்பு களவாடப்பட்டதா என்ற கேள்வியைத் தாங்கியிருந்தது ‘ஸ்பை’ தெலுங்குப் படத்தின் ட்ரெய்லர். அதன் மீது மாபெரும் எதிர்பார்ப்பு குவியவும் காரணமானது. படம் பார்த்து முடிந்தபிறகு, அந்த எதிர்பார்ப்பு என்னவானது?
வழக்கமான ’ஸ்பை’ படம்!
உளவாளிகளை நாயகர்களாகவும் கதாபாத்திரங்களாகவும் கொண்ட படங்கள் பல வகைமைகளில் உருப்பெறும். ஆக்ஷன், ட்ராமா, அட்வெஞ்சர், த்ரில்லர், பேண்டஸி என்று வெவ்வேறு வடிவங்களைத் தாங்கும். அப்படியொரு சாத்தியம் இருந்தும் ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாஸிபிள் படங்களின் தாக்கத்தில் ஆக்ஷன், அட்வெஞ்சர் எனும் எல்லைக்குள்ளேயே பெரும்பாலான ‘ஸ்பை’ படங்கள் வார்க்கப்படுகின்றன.
நிகில் சித்தார்த், ஐஸ்வர்யா மேனன், மாகரந்த் தேஷ்பாண்டே, ஜிஷு சென்குப்தா உள்ளிட்ட பலர் நடிப்பில், படத்தொகுப்பாளர் கேரி பிஹெச் முதன்முறையாக இயக்கியுள்ள ‘ஸ்பை’ திரைப்படமும் அந்த வரிசையில் இடம்பிடிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வைச் சேர்ந்தவர் சுபாஷ் (ஆர்யன் ராஜேஷ்). பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி காதிர் என்பவரைக் கொல்லச் செல்லும்போது அவர் மரணத்தைத் தழுவுகிறார். ஆனால், நடந்தது என்னவென்ற விவரம் ரா அதிகாரிகளுக்குக் கிடைப்பதில்லை.
காதிர் இறந்த தகவல் மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பயங்கரவாத இயக்கத்தை காதிர் நடத்தி வருவதாகத் தெரிய வருகிறது. ஜோர்டானில் அவர் உயிரோடு திரிவதும் கண்டறியப்படுகிறது.
அதையடுத்து, காதிர் குறித்த உண்மைகளை அறிவதற்காக ஜெய் (நிகில் சித்தார்த்) தலைமையிலான ரா அதிகாரிகள் குழு ஜோர்டானுக்குச் செல்கின்றனர்.

இறந்துபோன சுபாஷின் சகோதரர் தான் இந்த ஜெய். அண்ணனின் மரணத்திற்குப் பழி வாங்கும் வேட்கையோடு திரியும் ஜெய்க்கு, அதற்குக் காரணம் காதிர் தொடர்பான ஆபரேஷன் தான் என்பது தெரிய வருகிறது. அதேநேரத்தில், ரா தலைமையகத்தில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் சம்பந்தப்பட்ட ரகசியக் கோப்பொன்று திருடு போகிறது. அதனைத் திருடியவர் ராவைச் சார்ந்தவர் என்று கண்டுபிடித்தாலும், அவரது அடையாளத்தை முழுதாக அறியமுடியாமல் திணறுகின்றனர் அதிகாரிகள். மியான்மர் வழியாக நேபாளத்திற்குச் சென்ற அந்த நபர், அதன்பிறகு என்னவானார் என்பது மர்மமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், ஜெய் குழுவினர் காதிரை மடக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து வருகின்றனர். அதன் பலனாக, காதிரைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்பும் ஜெய்க்குக் கிடைக்கிறது. ஆனால், அவரோ காதிர் அருகிலிருக்கும் நபரைச் சுடுகிறார். அந்த நபர் தான் நேதாஜி சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் திருடியவர். அது மட்டுமல்ல, சுபாஷ் நடத்திய ஆபரேஷனில் அவருடன் ஒன்றாகப் பணியாற்றியவர்.
அந்த நபர் என்னவானார்? தனது சகோதரனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை ஜெய் அறிந்தாரா? நேதாஜி சம்பந்தப்பட்ட தகவல்கள் திருடு போனதற்கும், பயங்கரவாதக் கும்பலின் தலைவனுக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ஸ்பை’.
உண்மையிலேயே, லட்சம் சரவெடிகளை ஒன்றாகக் கோர்த்து தீப்பற்ற வைத்தது போன்றதொரு கதை தான். ஆனால், காட்சிகள் நகரும்விதமோ நம்மை ஐசியூவில் தள்ளிவிடும் அளவுக்கு இருக்கிறது. அதனால், ’சொதப்பலான திரைக்கதை அமைந்தபிறகு வேறு என்னதான் செய்வது’ என்பது போல நாயகன் முதற்கொண்டு அனைவரும் தேமேவென நடித்திருக்கின்றனர்.
வழி தவறியது எங்கே?
முதல் காட்சியிலேயே திரைக்கதை தடம் புரண்டு விடுகிறது. நேதாஜி சம்பந்தப்பட்ட கோப்பு களவு போவதில் இருந்துதான், இந்தப் படமே தொடங்கியிருக்க வேண்டும். இதனைப் பார்க்க ஒருவர் டிக்கெட் கவுண்டரில் காத்திருப்பதற்கான முதல் காரணம் அதுவே. ஆனால், ‘ஸ்பை’ கதாசிரியர் ராஜசேகர் ரெட்டி, திரைக்கதை வசனம் எழுதிய அனிருத் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அபிஷேக் மகரிஷி மட்டுமல்லாமல் இயக்குனர் கேரியும் கூட அதனைக் கவனிக்க மறந்திருக்கிறார். நாயகன் ஜெய் தனது சகோதரரைப் பறி கொடுத்ததும், அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கத் துடிப்பதும், அப்போது எளிதாக நம் மனதைத் தொட்டிருக்கும்.
வில்லன் யார் என்று நாயகன் அறியும் காட்சி, இந்தக் கதையில் மிக முக்கியமானது. ஆனால், அது மிகச்சாதாரணமாக வந்து போகிறது. அது மட்டுமல்ல, பல முக்கியத் திருப்பங்கள் சட்டென்று நம்மைக் கடக்கின்றன. அவற்றுக்கான காரண காரியங்கள் திரைக்கதையில் எங்குமே வெளிப்படவில்லை. பிட்காய்ன் பரிமாற்றம் மூலமாக பயங்கரவாத இயக்கமொன்று நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதையும், எல்லைப்பகுதிகளில் நிகழும் குளறுபடிகளையும் நாயகன் ‘ஜஸ்ட் லைக் தட்’ கண்டுபிடிப்பதாக ஒரு காட்சிக்கோர்வை படத்தில் உண்டு. அதனைப் பார்த்ததும், ‘எப்புட்றா..’ என்றே அலறத் தோன்றுகிறது.
இப்படியொரு ஆக்ஷன் கதையில் பாடல்களுக்குத்தான் இடமிருக்காது; நாயகியையாவது கவர்ச்சிகரமாக நடமாடவிடுவோமே என்ற நப்பாசையில் ஐஸ்வர்யா மேனனுக்கென்று ஒரு பிளாஷ்பேக்கும் சில காட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கதையின் மையத்திற்கும் அந்த ட்ராக்குக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அதேநேரத்தில், ஐஸ்வர்யாவை ஒளிப்பதிவாளர்கள் அழகுறக் காட்டியிருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
நாயகன் நிகில் சித்தார்த், கடந்த ஆண்டு கார்த்திகேயா 2, 18 பேஜஸ் என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களைத் தந்திருந்தார். அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்விதமாகவே இப்படம் அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அந்தளவுக்கு அவரது பாத்திரம் பலவீனமாக எழுதப்பட்டிருக்கிறது. நிகில் தந்தையாக வரும் தணிகல பரணி, ரா தலைவராக வரும் மாகரந்த் தேஷ்பாண்டே, ’மாற்றான்’ வில்லன் சச்சின் கடேகர், ஜிஷு சென்குப்தா, ரவிவர்மா மற்றும் நகைச்சுவை நடிகர் அபினவ் கோமதம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ராணா தாகுபதி கௌரவ தோற்றத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்.
இந்த படத்தில் வம்சி பட்சிபுலுசு உட்பட நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன் காட்சிகளில் அதற்கான பலன் தெரிய வருகிறது. ஆனால், கதை வலுவாக இல்லாததால் அவை விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது. ஸ்ரீசரன் பகலாவின் பின்னணி இசை கூட காட்சிகளின் தாக்கத்தை ஆழமானதாக மாற்ற முடியவில்லை.
பயணத்தில் சரிவு!
கிடைத்த காட்சிகளை ஒரு படத்தொகுப்பாளர் ஒன்றாகக் கோர்ப்பதற்கும், அவரே அப்படத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இந்த படம் அதனைச் சுக்கல்சுக்கலாக்கியுள்ளது. கேரி பிஹெச் ஒரு படத்தொகுப்பாளராகத் திறனைக் கொட்டியிருந்தாலும், ஒரு இயக்குனராகப் படத்தின் லகான் அவரிடம் இல்லை. ஜேம்ஸ் பாண்ட், ஈதன் ஹண்ட் உட்படப் பல ஹாலிவுட் ‘ஸ்பை’ பாத்திரங்கள் நினைத்த மாத்திரத்தில் பல நாடுகளுக்குப் பயணிப்பதாகக் காட்டப்படுவதுண்டு.
அதற்காக வலுவான காரணங்களும், சாத்தியங்களும் திரைக்கதையில் விளக்கப்படும். ஆனால், ‘ஸ்பை’ படத்திலோ குழந்தைகள் யோசித்து யோசித்துக் கதை சொல்வது போலக் காட்சிகள் தாறுமாறாக நகர்கின்றன.

நாயகனுக்கான அறிமுகச் சண்டைக்காட்சி இலங்கையில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது. அவரோடு மோதும் சட்டவிரோதக் கும்பலைச் சார்ந்தவர்கள் சுத்தத் தமிழில் பேசுகின்றனர். சுற்றிலும் சிங்கள எழுத்துகளுடன் கூடிய பலகைகள் தொங்குகின்றன. அந்தக் குழுவின் தலைவர்களோ சீனர்கள் போன்று தோற்றமளிக்கின்றனர்.
நாயகனும் அவரது நண்பரும் மட்டும் தெலுங்கில் உரையாடியவாறே சண்டையிடுகின்றனர். அதனைப் பார்த்ததும், ‘நல்லாத்தானே போய்ட்டிருந்தது’ என்று வடிவேலு பாணியில் நமது ‘மைண்ட்வாய்ஸ்’ மாறுகிறது. ஏன் இந்தச் சித்தரிப்பு என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
நெடுநாட்களுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ கூட ‘ஸ்பை’ ஆக்ஷன் படமே. அதன் வசூல் ஆயிரம் கோடிகளைத் தொட்டது. அதில் கொட்டப்பட்டிருந்த பட்ஜெட்டையும் உழைப்பையும் சிரத்தையையும் ஒப்பிடுகையில், இதன் பங்கு பல மடங்கு குறைவாகத்தான் தென்படும். இந்த லட்சணத்தில், இதன் இரண்டாம் பாகம் வருமோ என்ற கேள்வியை எழுப்புகிறது படத்தின் முடிவு.
முதல் சில நிமிடங்களிலேயே ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்று நொந்த நம் மனம், படம் முடியும்போது ‘அடுத்த அட்டாக்கா’ என்று அலறித் துடிக்கிறது.
சில திரைக்கதைகள் சீராகச் சென்று எங்காவது ஓரிடத்தில் சரியத் தொடங்கும். ‘ஸ்பை’யில் அது முதலிலேயே தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு, இரண்டு சக்கரங்களுடன் சாய்ந்தவாறே சாலையில் ஒரு கார் செல்வது போன்ற அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. யதார்த்தத்தை ஒட்டிய ‘ஸ்பை’ கதைகளை எழுதுவது கண்டிப்பாகச் சாத்தியம் கிடையாது.
அதனால், சாகசங்கள்தான் படத்தின் முக்கிய அம்சங்கள் என்றானபிறகு அதற்கேற்ற ’ஆக்ஷன் பிளாக்’குகளுக்கு கொஞ்சம் மூளையைக் கசக்கத்தான் வேண்டும். குறைந்தபட்சமாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்ப்பது நல்லது. அதைக்கூடச் செய்யத் தயாராக இல்லாதபோது, இப்படிப்பட்ட ‘இஸ்பை’படங்களைப் பார்த்து ‘இஸ்ஸ்..’ என்று காது வழியே புகைவிடத்தான் வேண்டும்.
தென்காசி கைதி மரணம் – வீடியோவை டெலிட் செய்த போலீஸ் : என்ன நடந்தது?