தென்காசி கைதி மரணம் – வீடியோவை டெலிட் செய்த போலீஸ் : என்ன நடந்தது?

தமிழகம்

தென்காசியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பட்டியலின வாலிபர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கசாமி (26). சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனை செய்ததாக கடந்த ஜூன் 1ஆம் தேதி புளியங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி அன்று சிறை வளாகத்தில் தங்கசாமி திடீரென மயங்கி விழுந்ததும், அவரை உடனே போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

“தங்கசாமி கைது செய்யப்பட்ட விபரமோ, விசாரணைக்கு அழைத்து சென்றதையோ, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட விபரத்தையோ எங்களிடம் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தங்கசாமி இறந்த பிறகு தான் அவர் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்” என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இதனால் தங்கசாமியின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து, ஜூன் 14 அன்று இரவில் புளியங்குடியிலுள்ள திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சொல்வது என்ன ?

விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு தங்கசாமி உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஜூன் 14 அன்று கொண்டு சென்றனர்.

அங்கு தங்கசாமி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறாய்வு அனைத்தும் வீடியோ முறையில் பதிவு செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘தங்கசாமி உடலில் 7 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அந்த காயங்கள் அனைத்தும் அவர் இறப்பதற்கு 3 அல்லது 4 நாட்கள் முன்னதாக ஏற்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையினை மையமாக வைத்து தங்கசாமி உடலில் காயங்கள் இருப்பதால் அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி , போலீசார் அடித்ததில் தான் தங்கசாமி இறந்ததாக குற்றம் சாட்டுகின்றனர் உறவினர்கள்.

தங்கசாமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் நம்மிடம் கூறுகையில், “டாஸ்மாக் கடையில் மதுவாங்கி அதனை கூடுதல் விலைக்கு வெளியே விற்பனை செய்த குற்றத்திற்காக தங்கசாமி கைது செய்யப்பட்டார்.

இவரின் கைது குறித்து குடும்பத்தினர் யாருக்கும் போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த 14 ஆம் தேதி தங்கசாமி இறந்து விட்டதாக குடும்பத்தினரை தொடர்பு கொண்டு போலீசார் விபரத்தை தெரிவித்தனர்.

உடனே அவரது குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்த தங்கசாமி உடலை பார்த்தனர்.

அப்போது தங்கசாமி உறவினர் ஒருவர், அவரது உடலை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததை பார்த்த துணை காவல் ஆய்வாளர் சதிஷ்குமார் அவரது செல்போனை பிடுங்கி காட்சிகளை அழித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ”இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவில்லை. போலீசார் தெரிவித்த கருத்து ஒன்றாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒன்றாகவும் முரண்பாடு இருப்பதால் தங்கசாமி மரணத்தில் மர்மம் உள்ளது” என்றார்.

இது குறித்து தங்கசாமியின் தாயார் பருத்தி நம்மிடம் பேசுகையில், “ எனது மகனை போலீசார் கைது செய்த விபரத்தை எங்களிடம் தெரிவிக்கவில்லை. முதலில் விசாரணைக்கு தான் அழைத்து சென்றதாக எங்களுக்கு தெரியவந்தது.

அதன் பிறகு எங்கள் ஊர் நாட்டாமை மூலம் எனது மகன் இறந்த தகவல் தெரியவந்தது. என் மகனுக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாகவும் போலீஸ் தரப்பில் கூறினார்கள்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அப்படி எதும் குறிப்பிடவில்லை. எனது மகன் தங்கசாமிக்கு எந்தவித நோய்களும் கிடையாது. போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று விட்டதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

எனது மகன் இறப்பிற்கு நியாயம் வேண்டும்” என்று கூறினார்.

தங்கசாமியின் சகோதரர் ஈஸ்வரன் கூறுகையில், “எனது அண்ணன் தங்கசாமியின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான் எனது நண்பர்களுடன் சென்று எனது அண்ணனின் உடலை பார்வையிட்டேன்.

அப்போது உடலில் இடுப்பு ,எலும்பு , கால், மூட்டு , தோல் பட்டை, முதுகு , ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கான காயங்கள் இருந்தன.

இதனை நான் எனது செல்போனில் படம் பிடித்ததை அங்கிருந்த காவலர் ஒருவர் அதனைப் பார்த்து எனது செல்போனை கைப்பற்றி என்னை மிரட்டி நான் எடுத்த படத்தினை மொபைலில் இருந்து அழித்துவிட்டார் .

எனது அண்ணன் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதியானது. எனது அண்ணன் மரணத்திற்கு நீதி வேண்டும்” என்று தெரிவித்தார்.

போலீசார் தரப்பில் கூறுவது என்ன ?

“விசாரணை கைதி தங்கசாமி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மயங்கி விழுந்ததன் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

நெல்லை நீதித்துறை முதன்மை நீதிபதி திருவேணி முன்னிலையில் உடற்கூறாய்வு நடந்து முடிந்தது . அதன் அறிக்கையும் முறையாக உறவினர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இது குறித்த விரிவான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது” என்று போலீசார் தரப்பில் தெரிவித்துவிட்டனர்.

சமூக ஆர்வலர், தன்னார்வலர் மாடசாமியிடம் நாம் இது குறித்து பேசும்போது:

“பட்டியலின இளைஞரை குறி வைத்து விசாரணை என்ற பெயரில் திட்டமிட்ட கொலை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

விசாரணையில் இருக்கும் கைதி மர்மமான முறையில் இறந்துள்ளார். சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தான் விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடந்துள்ளது.

அதன் பிறகு புளியங்குடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விசாரணை கைதிகளின் மரணம் தொடர் கதையாக நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அடிப்படையில் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

புளியங்குடி காவல் நிலையம் மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறை சாலை , ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு தலையிட்டு இது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தலையீடு

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் ஆகியோர் இறந்த தங்கசாமியின் தாயார் பருத்தியை நேரில் சந்தித்து உடலை வாங்கி கொள்ளும்படியாக பேச்சு வார்த்தை நடத்தியதாக வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் 5 லட்சம் ரூபாய் அவரது தாயாரிடம் கொடுக்கபட்டதாகவும், எம்.எல்.ஏ க்கள் தலையீடு காரணமாக அவரது தாயார் வேறு வழியின்றி உடலை பெற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் இது குறித்து சட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட காவலர்கள் மீது உரிய தண்டனைகளை பெற்று தர முயற்சி செய்வோம் என்றும் கூறினார்.

சாத்தான்குளம் தந்தை மகன் போலீசார் விசாரணையில் இறந்த அந்த கொடூரமான சம்பவத்தை தொடர்ந்து புளியங்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்த உதயநிதி

தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் தக்காளி!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *