தசரா திருவிழாவை ஒட்டி இன்றும், நாளையும் (அக்டோபர் 2, 3) முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தசரா கொண்டாட்டம் என்றாலே குலசேகரப்பட்டினம்தான். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் இந்த தசரா திருவிழாவைக் காண நாட்டின் பலப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதற்காக கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து காளி, அம்மன், சிவன், பார்வதி, முருகன், அரக்கர், குரங்கு, தாடகை, குறவன் – குறத்தி, குரங்கு, கரடி என வேடங்களை ஏற்று பொதுமக்களிடம் காணிக்கை பெற்று வந்தனர் பக்தர்கள்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று கடைசி நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அடுத்ததாக சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கிடையே சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக லட்சகணக்கான பக்தர்கள் சாலைகளில் நடந்தும், வேன், கார், ஆட்டோ என வாகனங்களிலும் குலசை நோக்கி விரைந்து வருகின்றனர்.
இதனால் காலை முதலே தூத்துக்குடியில் இருந்து குலசைக்கு செல்லும் முக்கிய சாலையான வீரபாண்டிய பட்டணம் – திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து குலசை வரும் வரும் பக்தர்களின் வசதிக்காக இன்றும், நாளையும் (அக்டோபர் 2, 3) முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை டிவிஷன் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில், “திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06106) நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும்.
அதே போன்று நெல்லையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06105) திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தடையும்.
மேலும் 10 பெட்டிகளுடன் இயங்கும் இந்த சிறப்பு ரயில்களானது, சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் மற்றும் பாளையங்கோட்டையில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.