ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 17) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘சீர்திருத்தப் பரப்புரையும் – குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். சாதி ஆணவப்படுகொலையை தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம்.பாட்ஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட புதிய ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம், அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அறிந்து, பரிந்துரைகளை வழங்கும் அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றும் என்று உறுதியளிக்கிறேன்.
காலனி என்ற சொல் நீக்கம் குறித்து அறிவித்தேன், இது சாதாரண சாதனை அல்ல. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம்.
அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட – சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.
எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது” என்று கூறினார்.
