தமிழ்நாட்டில் மீண்டும் அரசியல் மாற்றம் வரும் என கோவையில் இன்று (செப்டம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த எஸ்.பி.வேலுமணி தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். ஊருக்குள் யானைகள் சுற்றி வருவதும் தொடர்கிறது. அகழி வெட்டினால் கூட யானைகள் அதைத் தாண்டி வருகிறது. மின்வேலிகளும் பலனளிக்கவில்லை. ரயில் தண்டவாளம் போன்ற தடுப்புகளை வன எல்லைப் பகுதியில் ஏற்படுத்த ஒரு கோடி ஒதுக்கப்பட்டும் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் கோவை மாவட்ட வன அலுவலர் யாரையும் மதிப்பது இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் யானை தாக்கி சிலர் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் போராடினர். அதையும் முறையாக கையாளவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் மாவட்ட வன அலுவலரை மாற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கினோம். அந்தப் பணிகள் எல்லாம் பாதியில் நிற்கிறது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு துர்நாற்றம் வீசுகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். வெள்ளளூரில் பாதியில் நிற்கும் பேருந்து நிலையப் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் 6 மாத காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றம் வரும் அதிமுக ஆட்சியில் அதிக திட்டங்களைக் கொடுத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி செப்டம்பரில் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்தார்.