திரையில் நம்மை மிரள வைக்கிற பிரபலங்கள் பலர் நேரில் சந்திக்கும்போது, ரொம்பவே நட்பாகவும் கனிவாகவும் பழகுகிற இயல்பைக் கொண்டிருப்பது திகைப்பை ஏற்படுத்தும்.
அவர்களைக் கொண்டு ‘டிவி நிகழ்ச்சிகள்’ தயாரிக்கப்படும்போது, அந்த இயல்பின் சில துளிகள் தெரிய வரும். அப்படியொரு முயற்சியில் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவும் இறங்கியிருக்கிறார். ஜீ5 தளத்திற்காக அவர் தொகுத்து வழங்கும் ‘ஜெயமு நிச்சயமு ரா’ நிகழ்ச்சி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடு ஒன்றில் நடிகைகள் மீனா, மகேஸ்வரி, சிம்ரன் மூவரும் ஒன்றிணைந்து பங்கேற்றனர். மூவரும் ஒரே காலகட்டத்தில் வெற்றிகரமாக இயங்கியதுதான் காரணமா அல்லது முந்தைய தலைமுறை நடிகைகளை ஒரு எபிசோடில் அடைத்துவிடலாம் என்று நிகழ்ச்சி தயாரிப்புக் குழு கருதியதா என்று தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியின்போது, மறைந்த நடிகை சௌந்தர்யா உடன் கொண்டிருந்த நட்பு எத்தகையது என்று மீனாவிடம் கேள்வி எழுப்பினார் ஜெகபதி பாபு.
அதற்குப் பதில் சொன்ன மீனா, தாங்கள் வெற்றிகரமாக நடித்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியதாகச் சொன்னார்.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு பாரதீய ஜனதா கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் சென்றபோது நடந்த விமான விபத்தில் சௌந்தர்யா மரணமடைந்தார். அந்த விபத்தில் அவரது சகோதரர் உட்பட மேலும் இரண்டு பேர் பலியாகினர்.
அந்த விபத்தை நினைவுகூர்ந்த மீனா, அதிலிருந்து இன்று வரை தான் மீளவில்லை என்று தெரிவித்தார்.
”அன்றைய தினம் நடந்த பிரசாரத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் எனக்கு சரிவராது என்று சௌந்தர்யாவிடம் தெரிவித்தேன். அன்று எனக்கு படப்பிடிப்பு இருப்பதாகவும் சொன்னேன். இல்லாவிட்டால், நானும் அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அந்த விபத்து செய்தி அறிந்தவுடன் நான் ஆடிப் போய்விட்டேன்” என்று அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் மீனா.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து தனது மன உணர்வினை இந்நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்திருப்பது ரசிகர்களையும் உலுக்கியுள்ளது.