காதல் முறிவுகள் (Breakups) எப்போதுமே வலி நிறைந்தவை. “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை, பிரிந்துவிடலாம்” என்று முகத்துக்கு நேராகச் சொல்வது ஒரு ரகம். எதுவும் சொல்லாமல் திடீரென மாயமாகிவிடுவது ‘கோஸ்டிங்’ (Ghosting) ரகம். ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு புதிய ட்ரெண்ட் தான் ‘சாஃப்ட் எக்ஸிட்’ (Soft Exit). இதை உறவுகளில் “Quiet Quitting” என்றும் அழைக்கிறார்கள்.
‘சாஃப்ட் எக்ஸிட்‘ என்றால் என்ன? ஒரு உறவை நேரடியாக முடித்துக்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள் அல்லது “நான் தான் பிரிவுக்குக் காரணம்” என்ற பழியைச் சுமக்க விரும்பாதவர்கள் கையாளும் உத்தி இது. திடீரெனப் பேசுவதை நிறுத்த மாட்டார்கள். ஆனால், மெல்ல மெல்ல அந்த உறவிலிருந்து நழுவுவார்கள். இறுதியில், நீங்களே வெறுத்துப்போய் “நமக்கு இது செட் ஆகாது, பிரிந்துவிடலாம்” என்று சொல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், உங்களை வைத்தே உறவுக்கு ‘எண்டு கார்டு’ போட வைப்பார்கள்.
அறிகுறிகள் என்ன? உங்கள் பார்ட்னர் ‘சாஃப்ட் எக்ஸிட்’ செய்கிறாரா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
- பதில் குறைவது (Slow Fading): முன்பு உடனுக்குடன் வந்த மெசேஜ்கள், இப்போது மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் தாமதமாகும். கேட்டால் “சாரி, பார்க்கல”, “வேலையா இருந்தேன்” என்ற மழுப்பலான பதில்கள் வரும்.
- பிளான் போடுவதில்லை: எதிர்காலம் குறித்த பேச்சுக்களைத் தவிர்ப்பார்கள். அடுத்த வாரம் சினிமாவுக்குப் போகலாம் என்று கேட்டால் கூட, “அப்பப் பார்த்துக்கலாம்” என்று தட்டிக் கழிப்பார்கள்.
- ஆர்வம் இன்மை: நீங்கள் உங்கள் நாளைப் பற்றி உற்சாகமாகச் சொன்னால், “ம்ம்”, “ஓகே” என்ற ஒற்றை வரியில் பதில் முடியும். உங்களிடம் எதிர்க் கேள்விகள் கேட்க மாட்டார்கள்.
- தொடுதலில் மாற்றம்: கைகளைப் பிடித்து நடப்பது, அணைப்பது போன்ற உடல்ரீதியான நெருக்கத்தைத் (Physical Intimacy) தவிர்ப்பார்கள்.
ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
- மோதலைத் தவிர்க்க (Conflict Avoidance): சண்டை, அழுகை, வாக்குவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லாதவர்கள் இதைச் செய்வார்கள்.
- நல்லவர் இமேஜ்: “நானாகப் பிரியவில்லை, அவராகத்தான் பிரிந்துவிட்டார்” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளவும், நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கவும் இது உதவும்.
என்ன செய்வது? இந்த அறிகுறிகள் தென்பட்டால், “அவருக்கு என்னாச்சோ?” என்று குழப்பத்திலேயே நாட்களைக் கழிக்காதீர்கள். அது உங்கள் மனநலத்தைப் பாதிக்கும். நேரடியாகக் கேட்டுவிடுவது சிறந்தது. “நம்ம உறவு முன்பு போல இல்லை, என்ன பிரச்சினை?” என்று வெளிப்படையாகப் பேசுங்கள். ஒருவேளை அவர்கள் விலக நினைத்தால், அதை இழுத்துப்பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
நேரடியாகச் சொல்லிப் பிரிவது ஒரு முறை வலிக்கும்; ஆனால், ‘சாஃப்ட் எக்ஸிட்’ செய்வது தினம்தினம் வலிக்கும்!
