நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் இந்தியாவிற்கான முக்கியமான பாடம் உள்ளது.
மன்னத் மர்வஹா
சமீபத்தில், நேபாள அரசாங்கம் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி, ஆளும் ஆட்சியைக் கவிழ்த்த இறுதி அடியாக அமைந்தது. உள்நாட்டுப் பதிவுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறி, கே.பி. ஒலி அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது.
இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆன்லைன் விமர்சகர்களின் வாயை மூடச்செய்வதற்குமான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளோடு இவையும் சேர்ந்துகொண்டன. இது, பல நாடுகளின் அரசுகள், சமூக ஊடகங்களில் மிக முக்கியமான அம்சமான அவற்றின் பயனர்களுடன் கலந்தாலோசிக்காமல், கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த முயற்சிக்கும் உலகளாவிய போக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
பாரம்பரிய ஊடகங்களைப் போலன்றி, சமூக ஊடகங்கள் பங்கேற்புத் தன்மை கொண்டவை. சமூக ஊடக வலைத்தளங்களிலும் செயலிகளிலும் உள்ள பெரும்பாலான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் பயனர்களே. ஒரு பதிவு பிரபலமடைவதும் பெரும்பாலும் அவர்களால்தான் நிகழ்கிறது. வானொலி அலைவரிசை ஒன்றின் நிகழ்ச்சிகள் எவ்வளவு பரவலாகப் பரவுகின்றன என்பதில் அதன் நேயர்களால் சமூக ஊடகங்களில் அவற்றின் பயனர்கள் செலுத்தும் தாக்கத்தைப் போலத் தாக்கம் செலுத்த முடியாது. எனவே, புதிய ஊடகங்களை ஒழுங்குபடுத்தப் புதிய புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.
புதிய பொது வெளி

பயனர்கள்தான் ஒரு உள்ளடக்கம் பிரபலமடையக் காரணமானவர்கள் என்பதும், அது பரவும்போது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள் என்பதும், சமூக ஊடக ஒழுங்குமுறையை இரண்டு வழிகளில் சிக்கலாக்குகிறது. முதலாவதாக, ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் அதன் பிரபலத்திற்கும் யார் பொறுப்பு என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது கடினம். இரண்டாவதாக, பயனர்கள் எதிர்பாராத வழிகளில் மாற்றங்களுக்கு எதிர்வினையாற்றக்கூடும் என்பதால், புதிய விதிமுறைகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாமல் போகலாம்.
ஆனால், சமூக ஊடகங்கள், தவறான தகவல் பரவுதல் போன்ற பாரம்பரிய ஊடகங்களின் பழைய சிக்கல்களையும் கொண்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள அரசுகள், பாரம்பரிய ஊடகங்களை நிர்வகிக்கப் பயன்படுத்திய அதே ஒழுங்குமுறை வழிமுறைகளை நம்பியிருக்கின்றன.
தகவல் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த, கருத்து வேறுபாடுகளைத் தடுக்க, அல்லது அரசியல், கலாச்சார நிகழ்ச்சி நிரல்களை வலுப்படுத்த சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயலும் பல நாடுகளில் ஒன்றுதான் நேபாளம்.
சீனா, ஃபேஸ்புக், எக்ஸ் (X) போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கான அணுகலைத் தடுக்கிறது. அதற்குப் பதிலாக, கடுமையாகக் கண்காணிக்கப்படும் உள்நாட்டு மாற்று தளங்களை இயக்குகிறது. ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கலாச்சாரம், மதத்தின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் ஆன்லைன் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்கின்றன.
16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு அனைத்துச் சமூக ஊடகங்களுக்கும் ஆஸ்திரேலியா விதித்த தடை, இந்த போக்கிற்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை, பயனர்களின் தன்னாட்சி உரிமையைவிட அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அணுகுமுறைகள் அனைத்தும், புதிய ஊடகங்கள், அதன் பயனர்கள் பற்றிய நுட்பமான புரிதல் இன்று அரசுகளிடம் இல்லை என்பதையே காட்டுகின்றன.

இந்தியாவில், புதிய ஊடகங்கள், வெளிப்படைத்தன்மையற்ற உள்ளடக்கத்தை அகற்றும் முறைகளைத் தவிர, கடுமையான ஒழுங்குமுறைகளால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்த நிலை மாறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன: ஒருவரின் அனுமதியின்றி அவரது அந்தரங்கப் படங்களைப் பரப்புவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்க அண்மையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆலோசனைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் நிபுணர் குழு அறிக்கைகள் மூலம் ‘டீப்ஃபேக்குகளை’ (deepfakes) எதிர்த்துப் போராடுவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘இந்தியா காட் லேட்டண்ட்’ (India’s Got Latent) வழக்கில், இணையத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதற்காக, ‘இன்ஃப்ளூயன்சர் கோட்’ (influencer code) ஒன்றை உருவாக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டவுடன், புதிய ஊடகங்களுக்குப் பொருந்தும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறையின் அடிப்படை மேலும் வலுவாகும்.
இந்தியாவின் 80 கோடிக்கும் அதிகமான இணையப் பயனர்கள், பொருளாதார சுதந்திரத்தைப் பெறுவதற்கும், குடிமை, கலாச்சார, அரசியல் தளங்களை உருவாக்குவதற்கும் புதிய ஊடகங்களைச் சார்ந்துள்ளனர். நாடு இப்போது ஜனநாயகமயமாக்கப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்கும் பொருளாதாரத்தின் தாயகமாக உள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் வருமானம் ஈட்டும் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். ஆண்டுதோறும், இந்தியர்கள் யூடியூப்பில் மட்டும் 4.5 கோடி மணிநேர உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். இது, பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும், இந்தியக் கலாச்சாரத்தை உலகிற்கு ஏற்றுமதி செய்யவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. படைப்பாளிகளுக்கும் பயனர்களுக்குமான இந்த மாபெரும் தளம், பொது நலன் என்ற சில சமயங்களில் தெளிவற்ற கருத்தை பாதுகாக்க மற்றும் நிலைநிறுத்த வேண்டிய பல அரசு நிறுவனங்களுக்குச் சிக்கலான சவாலையும் அளிக்கிறது. புதிய ஊடகங்களின் நன்மை, தீமைக்கான சாத்தியக்கூறுகள் கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், நீதிபதிகள் ஆகிய அனைவரையும் குழப்புகின்றன.
ஒழுங்குமுறை என்னும் முரண்பாடு
இந்தியாவில் சமீபத்தில் டிஜிட்டல் சேவைகளை இலக்காகக் கொண்ட சட்டத் தலையீடுகள் கடுமையானதாகவும் திடீர் முடிவுகளாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, விளையாட்டாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட ‘இன்ஃப்ளூயன்சர் கோட்’ உருவாக்கப்பட்டாலும், அது சமூக ஊடகப் பயனர்களைப் பரந்துபட்ட, வெளிப்படையான கலந்தாலோசனையில் ஈடுபடுத்த வாய்ப்பில்லை. இத்தகைய தவிர்ப்பு, நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நேபாள உதாரணம் காட்டியுள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவின் தெருக்களில் காணப்பட்ட கொடூரமான காட்சிகள் இந்தியாவிலும் ஏற்படுமா என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், புதிய ஊடகங்கள் இன்றியமையாத படைப்பு – தகவல் சார்ந்த களம் என்பதில் ஐயமில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் ஒழுங்குமுறை கலந்தாலோசனைகளை மட்டும் வைத்துக்கொண்டு இதைக் கையாள முடியாது.
இந்தியாவின் அணுகுமுறை
இந்தியாவின் 2014ஆம் ஆண்டின் கலந்தாலோசனை கொள்கை, வரைவு விதிகளையும் விளக்கக் குறிப்புகளையும் வெளியிடுவதோடு, தொடர்புடைய அனைவரது கருத்துக்களையும் சேகரித்து வெளியிட வேண்டும் எனக் கோருகிறது. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போன்ற சில ஒழுங்குமுறை அமைப்புகள், இந்த செயல்முறையைப் பின்பற்றி, தங்கள் செயல்பாடுகளில் அடிப்படையான வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கின்றன. இருப்பினும், மற்ற பெரும்பாலான அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த நடவடிக்கையைத் தவறவிடுகின்றன. புதிய ஊடகங்கள் அவர்கள் இதை மீறிச் செல்ல வேண்டும் என்று கோருகின்றன.

கனடா போன்ற நாடுகளில் பொதுக் கலந்தாலோசனைகளில் சிறந்த நடைமுறைகள் உள்ளன. இவற்றிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம். கனடா, பொருளாதாரம் அல்லது குடிமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு ஒழுங்குமுறைக்கும் திறந்த கலந்தாலோசனைகளைக் கோருகிறது. யூகேயின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (OfCom), பயனர்களின் ஈடுபாடு, எந்தவொரு கொள்கை முன்மொழிவுக்கும் யதார்த்தமான காலக்கெடு, பெறப்பட்ட உள்ளீடுகளைத் தொடர்ந்து வெளியிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது. கலந்தாலோசனை முடிந்ததும், ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதற்கான காரணங்களையும் ஆஃப்காம் வழங்க வேண்டும். கலந்தாலோசனையில் கிடைக்கும் கருத்துக்களை மொத்தமாக வெளியிடுவதற்குப் பதிலாக, இந்தியா இந்த நடைமுறையைப் பின்பற்றலாம்.
புதிய ஊடகங்களை ஒழுங்குபடுத்துபவர்கள், குடிமைச் சமூகத்துடன் அதிக கலந்தாலோசனையை ஊக்குவிக்க வேண்டும். முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிப் பரந்த பொதுச் சேவை தகவல்தொடர்பு, சமூகம் பதிலளிக்கப் போதுமான கால அவகாசம், இந்தப் பதில்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மை, இறுதி விதிமுறைகள் இவற்றை எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்பதற்கான விளக்கங்கள் ஆகியவை சிறந்த முன்மாதிரியாக அமையும்.
சுருக்கமாகச் சொல்வதானால், சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கு ஜனநாயகத்தன்மை கொண்ட பரந்துபட்ட அணுகுமுறை தேவை. சமூக ஊடகப் பயனர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவர்களை ஆலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். நேபாள நெருக்கடி சொல்லும் பாடம் இதுதான்.
மன்னத் மர்வஹா, கோன் அட்வைசரி குரூப்பில் புதிய ஊடக ஆராய்ச்சியாளர் .