எண்பதுகளைச் சேர்ந்த திரையுலக நடிகர்கள் நடிகைகளில் பலர் ‘ரீயூனியன்’ என்ற பெயரில் சில ஆண்டுகளாகக் கூடிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைச் சமீப ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியைச் சேர்ந்த கலைஞர்களில் சிலர் இதில் பங்கேற்று வருகின்றனர். தமிழைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், ராதிகா, ஸ்ரீபிரியா, ரேவதி, சரிதா, பூர்ணிமா, சுமலதா என்று பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.
நடிகைகள் லிசி மற்றும் சுஹாசினி இருவரும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்களாக இருந்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரோடு இவர்கள் இருவருமே நட்பு பேணி வருகின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையின்போது இவர்கள் இருவரும் சேர்ந்தளித்த விருந்தில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
அது பற்றிய தகவல்கள் சில ஊடகங்களிலும் வெளியாகின. அந்த வெப்பம் அடங்குவதற்குள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஓவியத்தை பதிவிட்டார் நடிகை ஷோபனா.
அதனைக் காணும் எவரும் ‘இது தளபதி படத்துல ரஜினியோட ஷோபனா வர்ற காட்சி’ என்று சொல்லிவிடுவார்கள். இதே போன்றதொரு காட்சி, மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த படமொன்றிலும் இடம்பெற்றிருக்கிறது போல..
ஆனால், ‘தளபதி’யின் தீவிர ரசிகர்கள் அந்த காட்சி எதிலிருந்து எடுத்தாளப்பட்டது என்றும் சொல்லிவிடுவார்கள்.

அந்த பதிவில், ‘இந்த ஓவியத்தை வரைந்தவர் ஒரு நடிகை, ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இயக்குனர், ஒரு நன்கொடையாளர். யார் அவர்’ என்று கேட்டிருந்தார் ஷோபனா.
அதனைப் பார்த்த மலையாள ரசிகர்கள் பலர் ‘ரேவதி’ என்றே பதிலளித்திருந்தார்கள். இறுதியில், ‘அது சுஹாசினி மணிரத்னம்’ என்ற ரகசியம் பகிர்ந்தார் ஷோபனா. சென்னை திரைப்படக் கல்லூரியில் அவர் ‘ஒளிப்பதிவு’ பிரிவில் படித்து பதக்கம் பெற்ற முதல் மாணவி என்றும் சொல்லியிருந்தார்.

’நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் சுஹாசினி நடித்ததை அறிந்தவர்கள், நிச்சயம் இந்த கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லியிருப்பார்கள். மணிரத்னத்தின் படங்களைக் கொண்டாடுகிற முதல் ரசிகையாகவும் அவர் இருப்பதை அறிந்தவர்களால் எப்படித் தவறான பதிலைச் சொல்ல முடியும்?!