சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பனி தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக பனி காலம் டிசம்பர் மற்றும் ஜனவரியில் உச்சத்தில் இருக்கும். பிப்ரவரி நடு பகுதியில் பனி குறைந்து கோடைக்காலம் தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே சென்னையில் அதிகளவு பனி பெய்து வருகிறது. தற்போது பிப்ரவரி நடுப்பகுதி வரவிருக்கும் நிலையில் இன்னும் அதிகாலை வேளையில் குளிர் குறையவில்லை. குறிப்பாக இன்று அதிகாலை பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்தநிலையில் சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பனி மூட்டம் காலை வேளையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 9) வெளியிடப்பட்ட அறிவிப்பில், “09-02-2026 முதல் 11-02-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
12-02-2026 மற்றும் 13-02-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
