திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2ஆண்டு கால சிறைத் தண்டனையை சென்னை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை கொடுங்கையூரில் 2023-ஆம் ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் உள்ளிட்டோரை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (நீதிபதி பி. ரேவதி) விசாரணைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும் ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்றும் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று (மார்ச் 5) நீதிபதி பாண்டியராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், எழும்பூர் நீதிமன்றம் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாகப் பரிசீலிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனிநபர்கள் தனக்கு எதிராக தனியாக வழக்கு தொடராத நிலையில் தண்டனை விதிக்கப்பட்டது தவறு என்றும் வாதிட்டனர்.
தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி பாண்டியராஜன், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
